கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார்.

கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார்கள். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மார்ச் 27 அன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், 11 பேரை கடந்த 27 ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள்.

அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.

எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது.

கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதல்வராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்:

தீர்மானம்: “தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது.” என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.

முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “கச்சத்தீவு தாரைவார்க்கப்பட காங்கிரஸ் கட்சியும் திமுகவுமே காரணம். என்றாலும், தமிழக மீனவர்களின் நலன் கருதி இந்த தீர்மானத்தை பாஜக ஆதரிக்கிறது” என தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக செய்த தவறுகள் குறித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயர் அப்பாவுவின் கோரிக்கையை அடுத்து தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.