ஸ்ரீதர்ம சாஸ்தாவின் பிறந்த தினமாகப் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக இன்று காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் திருக்கொடி ஏற்றப்படுகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவுக்காகக் கொடியேற்றப்படுவதை முன்னிட்டு நேற்று மாலை திருநடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் சுத்திகிரியை நடந்தது. திருக்கொடியேற்றத்துக்கான திருக்கொடி மற்றும் கயிறு ஆகியவைக் கொல்லம் சக்திகுளங்கரை ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலிலிருந்து சபரிமலைக்குக் கொண்டுவரப்பட்டது.
திருக்கொடியைக் கோயில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பம்பையில் சுவாமிக்கு ஆறாட்டு ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து சித்திரை விஷூ பூஜைகள் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. சித்திரை விஷூ தினத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரை கணிகாணும் நிகழ்வு நடக்கிறது.
7 மணி முதல் அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் மாதாந்திர பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதியான நேற்று சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

தொடர்ச்சியாக 18 தினங்கள் சபரிமலை நடை திறந்திருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
சபரிமலை தரிசனத்துக்கான புதிய நடைமுறை கடந்த மாத பூஜையின்போதே கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி பதினெட்டாம் படியில் ஏறியதும் மேம்பாலம் வழியாகச் சுற்றிச் செல்லாமல், கொடிமரத்திலிருந்து நேரடியாக ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…