டிரம்பின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும்: வெள்ளை மாளிகை – அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும்…?

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் அரசு நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருமாற்றுவேன் என்று கூறினார். அமெரிக்காவில் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறையை ஏற்படுத்தினார். நட்பு நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதில், ரஷியாவுக்கு எதிராக தீவிர போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனும் அடங்கும். முதல் பதவி காலத்தில் சீனாவுடன் மறைமுக பனிப்போரில் டிரம்ப் ஈடுபட்டார். 2-வது முறையாக அவர் அமெரிக்க ஜனாதிபதியான நிலையில், பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வரி விதிப்புகளை அமல்படுத்தி வருகிறார்.

கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார். பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதற்கு, பென்டனைல் எனப்படும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை அமெரிக்காவுக்குள் அந்நாடுகள் கொண்டு வந்தன. இதனால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பலியானார்கள் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தும் முடிவை டிரம்ப் அரசு எடுத்துள்ளது. இந்த வரி விதிப்புகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, டிரம்ப், வர்த்தக குழுவுடன் சந்திப்பு நடத்தினார். அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டதும் இன்று மாலை 4 மணி முதல் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.

2-வது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிடுகிறார்.

டிரம்பிடம், உங்களுடைய இந்த வரி விதிப்புகள், அனைத்து நாடுகளையும் சீனாவை நோக்கி தள்ளுவதற்கான சாத்தியம் ஏற்படுத்தி விடுமே என்பது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, உடனடியாக அவர், இல்லை. அதுபற்றி நான் கவலை கொள்ளவில்லை. வரி விதிப்பில் அவர்கள் சிறந்த வழிகளை கையாள்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறேன்.

நிச்சயம் ஒரு வழியில், இந்த வரி விதிப்புகள் அவர்களுக்கு உண்மையாக உதவ கூடும். அவர்களில் பலர் தங்களுடைய வரி விதிப்புகளை குறைப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஏனெனில், பல ஆண்டுகளாக அவர்கள் அமெரிக்கா மீது நேர்மையற்ற வகையில் வரிகளை விதித்து வருகிறார்கள் என்றார்.

இந்த வரி விதிப்புகள், உண்மையில் அந்த நாடுகள் சிறப்பாக செயல்பட உதவும் என பதிலளித்த அவர், எனினும், அது எப்படி சாத்தியம் என்பது பற்றி விளக்கவில்லை.

டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் வேளாண் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த 100 சதவீத வரி விதிப்பால் ரசாயனம், உலோக பொருட்கள், நகைகள், ஆட்டோ மொபைல்கள், மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் விலை பல மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், டிரம்ப் கூறும்போது, அமெரிக்க தயாரிப்பு கார்களுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு வரிகளை குறைத்துள்ளது என்றார். இதனால், 2.5 சதவீதம் என்ற அளவில் வரிகள் இருக்கும். இந்தியாவும், பெரிய அளவில் வரிகளை குறைக்க போகிறது என சமீபத்தில் கேள்விப்பட்டேன். நீண்ட காலத்திற்கு முன்பே சிலர் ஏன் இதனை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் அனைத்து வர்த்தக நட்புறவு நாடுகளின் மீதும் வரிகளை விதிக்க அவர் திட்டமிட்டு உள்ளாரா? சில நாடுகள் மீது மட்டும் வரிகளை விதிக்க போகிறாரா? அல்லது உலக அளவில் வரிகளை விதிக்க திட்டமிட்டு உள்ளாரா? என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக தெரிய வரவில்லை. டிரம்பின் ஆலோசகர்கள் அவருடைய வரி விதிப்பு திட்டத்திற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகின்றனர். எனினும், ஒவ்வொருவரும் அவற்றை அணுகுவதில் வேறுபடுகின்றனர்.

இதனால், அமெரிக்காவின் நடவடிக்கை எதிரொலியாக, சில நாடுகள் பதிலுக்கு வரிகளை விதிக்க திட்டமிட்டு உள்ளன. வேறு சில நாடுகள் வரி விதிப்பை தவிர்க்க பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, சீன தயாரிப்பு பொருட்களுக்கு 60 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார். எனினும், பதவிக்கு வந்ததும் உடனடியான நடவடிக்கை எதிலும் அவர் ஈடுபடவில்லை. இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்யும்படி தன்னுடைய நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். இந்த சூழலில், அமெரிக்காவை சரிவில் இருந்து காப்பாற்ற 100 சதவீத வரி விதிப்பு என்ற முடிவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவின் பொற்காலம் மீட்டெடுக்கப்படும் என டிரம்பின் நடவடிக்கை பற்றி வெள்ளை மாளிகை கூறி வருகிறது. எனினும், சி.என்.என். வெளியிட்ட செய்தியில், நவீன அமெரிக்க வரலாறில் அதிக வரி விதித்த ஜனாதிபதியாக டிரம்ப் பார்க்கப்படுவார் என தெரிவித்ததுடன், தீவிர வரி விதிப்பு நடவடிக்கையாக இந்த வர்த்தக கொள்கை அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.