நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதில், ரூ.50 லட்சம் பணத்தை பூலையா, தன் மகன் கணேசனுக்கு பங்காகக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கணேசன் அவரது வீட்டின் அருகில் புதிகாக வேறொரு வீடு கட்டி வருகிறார். இதற்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பூலையாவிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறினாராம். ஆனால், சொன்னபடி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதுடன், அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. ‘
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், சிவந்திபட்டி அருகிலுள்ள முத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் பூலையா நடந்து வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கணேசன் ரூ.10 லட்சம் பணத்தைப் பற்றி கேட்டுள்ளார். ”என்னால் இப்போது பணம் கொடுக்க முடியாது.” எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணேசன், பூலையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பூலையா, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

“என் தந்தை சொத்தை விற்ற பணத்தில் ஒரு பகுதியை மட்டும்தான் என்னிடம் கொடுத்தார். எனக்கு தருவதாகச் சொன்ன பணம் ரூ.10 லட்சத்தை தரவில்லை. பலமுறை கேட்டும் காலம் தாழ்த்தி வந்தார். ஒரு கட்டத்தில் ஒரு ரூபாய்கூட தர முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனச் சொன்னார். அதனால் அவரை கொலை செய்தேன்” என விசாரணையில் சொல்லி போலீஸாரையே அதிர வைத்துள்ளார். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.