புதுடெல்லி: மக்களவையில் நடந்த வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த காரசாரமான விவாதத்துக்கு இடையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே பாஜக தலைமை குறித்து ஒரு கலாய்ப்புச் சண்டை நடந்தது.
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு சட்டத் திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர், திடீரென விவாதத்தில் இருந்து விலகி, பாஜகவின் அடுத்த தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பேசும்போது, “உலகின் மிகப் பெரிய கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் கட்சியால் இன்னும் அவர்களின் அடுத்த தேசியத் தலைவரைக் கூடத் தேர்வு செய்ய முடியவில்லை” என்று புன்னைகை முகத்துடன் காலாக்கும் தொனியுடன் கூறினார்.
இதனைக் கேட்டதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிரிப்பை அடக்க முடியமால் திணறினர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிரிப்பை அடக்க முடியமால் புன்னகைத்தார். பின்பு தங்கள் கட்சியின் செயல்முறை பிறக் கட்சிகளைப் போல குடும்ப உறுப்பினர்களில் இருந்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று அமித் ஷா பதிலளித்தார்
அகிலேஷுக்கு பதில் அளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அகிலேஷ் புன்னகை மாறாமல் தனது கருத்தை தெரிவித்தார். நானும் அதே வழியில் அவருக்கு பதில் அளிக்கிறேன். இந்த அவையில் எங்களுக்கு எதிராக அமர்ந்திருக்கும் கட்சிகளின் தேசிய தலைவர்கள் அனைவரும் ஐந்து குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், எங்கள் கட்சியில், 12 – 13 கோடி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு செயல்முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆகையால். இயல்பாகவே அதற்கு கூடுதல் காலம் எடுக்கும். உங்கள் (அகிலேஷ்) விஷயத்தில் அது அவ்ளவு நேரம் எடுக்காது. இன்னும் 25 வருடத்துக்கு நீங்கள் தலைவராக இருப்பீர்கள் என்று நான் கூறுகிறேன்” என்று கேலியாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் தனது பேச்சினுடே பிரதமர் மோடியின் சமீபத்திய நாக்பூர் பயணத்தையும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில், “தனது பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள யாரே ஒருவர் (நரேந்திர மோடி) 75 வயது வரம்பை நீட்டிக்கக் கோரி ஒரு யாத்திரையை (ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு) மேற்கொண்டார்” என்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக மோடி ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் உள்ள ஆர்ஆர்எஸ் தலைமையகத்துக்கு சென்றார். வரும் செப்டம்பரில் 75 வயதை பூர்த்தி செய்யும் பிரதமர் மோடியின் இந்த நாக்பூர் பயணம் அவரின் அரசியல் எதிர்காலம் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி அமைச்சரவையில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சேர்க்கப்பட்டதை அடுத்து, கட்சியின் அடுத்த தேசியத் தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறை 10 மாதங்களாக நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.