தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் ‘மதகஜராஜா’. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட பொக்கேவை நீட்டியது.
இந்நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் என்ன?
விஷால் அடுத்து சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், இப்போது விஷாலை இயக்கப் போகிறவர் ரவிஅரசு என்கிறார்கள். இதற்கு முன் கவனிக்கப்பட்ட ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ படங்களை இயக்கியவர் இவர்.

ரவிஅரசு இயக்கத்தில் அதர்வா, ஶ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான படம் ‘ஈட்டி’. உடலளவில் ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் ‘ஈட்டி’. விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும், பாடல்களுக்காகவும் பேசப்பட்ட படம். இதனை அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து ‘ஐங்கரன்’ என்ற படத்தை இயக்கினார். திருடுவதற்காக அஞ்சாமல் படுகொலைகள் செய்யும் கொலைகாரனின் பாதையில் புத்திசாலி விஞ்ஞானி ஒருவன் குறுக்கே வந்தால் என்னவாகும் என்பதை இருவேறு கதைகளாக சொல்லியிருப்பார் இயக்குநர்.
இதனை அடுத்து கன்னடத்தில் சிவராஜ்குமாரை இயக்குவார் என செய்திகள் வெளியானது. சத்யஜோதி தயாரிப்பில் சிவராஜ் குமார் நடிக்கும் இப்படம், அவரது நேரடி தமிழ்ப்படம் என்றும், ஜாவா பைக் ஒன்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகும் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில் இப்போது விஷாலை இயக்கப் போகிறார் ரவிஅரசு. சில மாதங்களுக்கு முன் விஷாலிடம் அவர் சொன்ன ஒன் லைன் விஷாலுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. இப்போது அதனை பக்காவாக டெவலப்பும் செய்தவர், படப்பிடிப்பிற்கும் ரெடியாகிவிட்டார். இந்தப்படம் ஆக்ஷனுடன் அழுத்தமான விஷயம் ஒன்றையும் பேசும் என்கிறார்கள். விஷாலின் ஜோடியாக துஷாரா நடிக்கிறார். ‘ராயன்’, ‘வீரதீர சூரன்’ என துஷாரா, நடிப்பிற்கான ஸ்கோப் உள்ள கதைகளை கையில் எடுப்பதால், இதிலும் துஷாவின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கிறது.
இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு அதன்பிறகு விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் என பல இடங்களில் வளர்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு சிவராஜ் குமாரின் படத்திற்கு செல்வார் என்கிறார்கள்.