புதுடெல்லி: முஸ்லிம்களின் மத விவகாரங்களில் முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்களின் எந்தவித தலையீடும் இருக்காது என வக்பு திருத்த மசோதா குறித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. புதன்கிழமை அன்று மக்களவையில் பேசிய அவர், இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்புவதாக தெரிவித்தார்.
இந்த மசோதா வக்பு வாரிய சொத்துக்களின் தவறான நிர்வாகத்தைத் தடுப்பதையும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு சட்டத் திருத்த மசோதாவை புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமித் ஷா தெரிவித்தது:
முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் சேர்ப்பதால் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்ற வாதங்களை பார்க்க முடிந்தது. இந்த சட்ட திருத்தம் அதற்காக கொண்டு வரப்படவில்லை. சிறுபான்மையினரிடையே தங்களது வாக்கு வங்கிக்காக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தவறான கருத்து பரப்பப்படுகிறது.
முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்கள் மத விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். வக்பு வாரியத்தின் நிர்வாகம் மற்றும் நன்கொடை நிதி சார்ந்த விஷயத்தில் நிர்வாக ரீதியாக அவர்கள் பணிபுரிவார்கள். அனைத்தும் சட்டப்படி நடக்கிறதா, ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் தேவைக்காக நிதி செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் கவனிப்பார்கள். அனைத்துக்கும் கணக்கு இருக்கும். வெளிப்படைத்தன்மைக்காக ஓய்வுபெற்ற சிஏஜி அதிகாரிகள் கணக்கு விவகாரங்களை கவனிப்பார்கள் என அவர் கூறினார்.