வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான எதிர்ப்புக்கு காரணங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.2) வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் அவசியம் குறித்து அரசு தரப்பின் கருத்துகள், எதிர்ப்புக்கான காரணங்களை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

வக்பு என்பது ஒரு இஸ்லாமிய பாரம்பரியமாகும். இந்த வக்புக்காக ஒருவர் தனது சொத்தை மதம், சமூகம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நிரந்தரமாக அர்ப்பணிக்கிறார். இந்த சொத்து நிரந்தரமாக வக்பு வாரியத்தின் சொத்தாக மாறிவிடும். எனினும், இந்த சொத்து முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்கள், கட்டிடங்கள், தர்கா, மசூதி, பள்ளி, மருத்துவமனை, கல்லறை, சிறப்பு தொழுகைகளுக்கான ஈத்கா போன்ற பல வடிவங்களில் இந்த சொத்துகள் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மட்டத்தில் வக்பு வாரியங்கள் உள்ளன. அவை வக்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றன. வக்பு வாரியத்திடம் மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் நிலமும் 8.7 லட்சம் சொத்துகளும் உள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் மிக அதிகமான சொத்துகள் கொண்ட அமைப்புகளில் ஒன்றாகும். வக்பு வாரியத்தின் நிர்வாகத் தவறுகள் மற்றும் வழக்குகளின் காரணமாக பல வக்பு சொத்துகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன.

தற்போது, வக்பு தீர்ப்பாயத்தில் 40,951 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 9,942 வழக்குகள் வக்பு நிறுவனங்களுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், வக்பு சொத்துகளின் தவறான மேலாண்மை மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் உள்ளிட்டவையும் அடங்கும். வக்பு மீதான சட்டத் திருத்தம் கடைசியாக 1995-ல் அமலானது. அதன் பிறகு மீண்டும் இன்று (ஏப்.2) சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுகிறது.

மத்திய அரசு சொல்வது என்ன? – வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுடன், அவற்றின் நிர்வாகத்தை திறம்படச் செய்வதும் இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். தற்போது, வக்பு வாரியத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் புதிய மசோதாவின் கீழ், இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படுவார்கள்.

இத்துடன், வக்பு சொத்துகளின் பதிவு மற்றும் சரியான மதிப்பீடு மறுவரை செய்யப்படும். இதனால், வக்பு சொத்துகளை முறையாக நிர்வகிக்க முடியும் என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளது. புதிய சட்டதிருத்தத்தின்படி, வக்பு சொத்துக்களின் சரியான மதிப்பு மற்றும் நிலையை மதிப்பிடுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அவற்றைப் பதிவு செய்வது கட்டாயமாகும். வக்பு வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் இப்போது அரசால் பரிந்துரைக்கப்படுவார்கள்.

புதிய மாற்றத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரியத்தில் உறுப்பினர்களாகலாம், குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பது கட்டாயம். இது தவிர, வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம் என்று இந்த புதிய மசோதா முன்மொழிகிறது.

புதிய மாற்றங்களுக்கு எதிர்ப்பு ஏன்? – வக்புக்கான சட்டத் திருத்தத்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் செய்கிறது. எனினும், இந்தியாவின் முஸ்லிம் சமூகமும், எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக எதிர்க்கின்றன.

இந்தத் திருத்தம் வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. அதேநேரத்தில், இஸ்லாம் மதத்திலும் அரசு தலையீடு அதிகரிக்கும் என்று கருத்து கூறப்படுகிறது. மேலும், புதிய சட்டத் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், வக்பு வாரியங்களில் அதிகாரங்களை மையப்படுத்தும் எனவும் கருதப்படுகிறது. மத மற்றும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை மட்டுமே வக்பு வாரியம் உரிமை கோர முடியும்.

வக்பு வாரியம் தனியார் சொத்துகளில் எந்த உரிமையும் கோர முடியாது. இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த வக்பு மசோதா, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.