புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜு ஜனதா தளம் தெரிவித்துள்ளது. ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. அதேநேரத்தில், மாநிலங்களவையில் 7 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இண்டியா கூட்டணியைச் சாராத இந்தக் கட்சி, பிரச்சினைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறது. வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று (ஏப்.2) தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மசோதா மீதான தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சஸ்மித் பத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவை பிஜு ஜனதா தளம் எதிர்க்கிறது. இந்த மசோதாவில் சேர்க்க சில பரிந்துரைகளை பிஜு ஜனதா தளம் வழங்கியது. ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன. இந்த மசோதாவில் கட்சி திருப்தி அடையவில்லை. இந்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் முசிபுல்லா கான் நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பாகப் பேசுவார்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்திற்குப் பிறகு மசோதாவில் சில அம்சங்களை மத்திய அரசு திருத்தியுள்ளது. வக்பு நிலத்தின் நிலையை தீர்மானிப்பதில் மாநில அரசுக்கு மசோதா முழுமையான அதிகாரங்களை வழங்குகிறது. இது தேவையற்ற தலையீட்டிற்கு வழிவகுக்கும். வக்பு அமைப்புகளுக்கு சட்ட மற்றும் நிறுவன ஆதரவு இல்லாததால், அதிகாரிகளால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு இது வழிவகுக்கும்.
தவிர, இந்த மசோதா உண்மையிலேயே சுதந்திரமான மேல்முறையீட்டு வழிமுறையை வழங்கத் தவறிவிட்டது. இது வக்பு சொத்துக்களை தன்னிச்சையாக வகைப்படுத்த வழிவகுக்கும். அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், வெளிப்படையான மற்றும் நியாயமான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் பிஜு ஜனதா தளம் உறுதிபூண்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.