வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

கடந்த ஜனவரியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், 655 பக்க அறிக்கையை கூட்டுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை கடந்த பிப்வரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா தொடர்பாக அவையில் 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன்பிறகு மசோதா தொடர்பாக அவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக எம்பிக்கள் அனைவரும் மக்களவை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அவையில் கட்சிகளின் பலம்: மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்கள் உள்ளனர். வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு 294 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 234 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் மொத்தம் 236 எம்பிக்கள் உள்ளனர். இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 121 எம்பிக்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 85 எம்பிக்களும் உள்ளனர். இரு அணிகளை சேராத 30 எம்பிக்களும் உள்ளனர். மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 119 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவே மாநிலங்களவையிலும் மசோதா எளிதாக நிறைவேற்றப்படும். ஏப்ரல் 4-ம் தேதி பட்ஜெட் தொடர் நிறைவடைகிறது. அதற்குள்ளாக இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் கருத்து: வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் மசோதா மீதான விவாத நேரம் நீட்டிக்கப்படும். மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஏழை முஸ்லிம்களின் நலன்களை கருத்தில் கொண்டு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. வக்பு சொத்துகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சிலர் மட்டுமே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கேரள கத்தோலிக்க பேராயர்கள் கவுன்சிலும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

திருத்தங்கள் என்ன? – பழைய சட்டத்தின்படி வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வக்பு தீர்ப்பாயம் மட்டுமே விசாரிக்க முடியும்.

தற்போதைய சட்ட திருத்தங்களின்படி வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் வக்பு வாரிய சொத்துகள் குறித்து விசாரணை நடத்த முடியும்.

பழைய சட்டத்தின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. புதிய சட்டத் திருத்தங்களின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

பழைய சட்டத்தின்படி ஓர் இடத்தில் மசூதி அல்லது முஸ்லிம் அமைப்புகளின் கட்டிடங்கள் இருந்தால் அந்த இடம் தானாகவே வக்பு வாரியத்துக்கு சொந்தமாகி விடும். புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.

பழைய சட்டத்தின்படி பெண்கள் மற்றும் இதர மதங்களை சேர்ந்தவர்கள் வக்பு வாரியத்தில் உறுப்பினராக அனுமதி கிடையாது. புதிய சட்ட மசோதாவின்படி 2 பெண்கள் மற்றும் இதர மதங்களை சேர்ந்த 2 பேர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இணைக்கப்படுவர்.

தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கவும் வக்பு சட்ட திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

வக்பு வாரிய சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்த சொத்துகளின் விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

கேரள பேராயர்கள் கவுன்சில் ஆதரவு: கேரள கத்தோலிக்க பேராயர்கள் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “வக்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அனைத்து எம்பிக்களும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக கேரள எம்பிக்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கூறியதாவது: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், முனம்பம் பகுதியில் சுமார் 404 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறது. இந்த பகுதியில் இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த சுமார் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள், பரூக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி பணம் கொடுத்து நிலத்தை வாங்கி பத்திரப் பதிவு செய்து உள்ளனர்.

ஆனால் திடீரென வக்பு வாரியம், நிலத்தை உரிமை கொண்டாடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே வக்பு திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவை அனைத்து எம்பிக்களும் ஆதரிக்க வேண்டும் என்று கேரள கத்தோலிக்க பேராயர்கள் கவுன்சில் சார்பில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.