புதுடெல்லி: வக்பு நிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மதத் துறவி தினேஷ் ஃபலாஹரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது ரத்தத்தால் அந்தக் கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார்.
மதுராவின்ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியை அகற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் துறவி தினேஷ் ஃபலாஹரி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சபதத்தின்படி, இவர் காலணி அணிவதில்லை. மதுராவைச் சேர்ந்த துறவியான இவர், வக்பு சொத்துகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தின் விவரம்:
“1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து, இந்தியா இந்துக்களுக்கு வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற பெயரில் ஜின்னா, நாட்டை பிரித்து விட்டார். வக்பு வாரியத்தை அமைத்து காங்கிரஸ் இந்தியாவின் மதிப்புமிக்க நிலங்களை முஸ்லிம்களுக்குக் கொடுத்தது. இப்படியாக, காங்கிரஸ் அரசு எப்போதும் இந்துக்களை ஏமாற்றி வருகிறது. இந்நாட்டின் பிரதமரான நீங்கள் இந்துக்களின் பெருமை. இந்துக்களின் ஒரே நம்பிக்கை நீங்கள் மட்டுமே.
வக்பு வாரியத்தின் இந்த சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மேலும், வக்பு வாரியத்தியடமிருந்து மீட்கப்பட்ட இந்த சொத்துகள் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனால், பொதுமக்கள் அதைத் தம் பொதுநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வக்பு வாரியத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள். அவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.