சென்னை: வேளாண்மை படிப்புகளில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ இராம.கருமாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை வேளாண்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை, பால்வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் இராம.கருமாணிக்கம் (திருவாடானை தொகுதி) பேசியது: ”விவசாயிகளுக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் வேலிக்கருவை (சீமைக் கருவேலம்) மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இத்திட்டத்துக்கான நிலுவைத்தொகையை வழங்குமாறு மத்திய அரசு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது, மீனவர்களின் கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. தொடர் உண்ணாவிரத போராட்டம்தான் இப்பிரச்சினைக்கு சரியாக தீரவாக இருக்கும்.
வெளிநாடுகளில் இருப்பதைப் போல மீனவர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழக அரசும் கொண்டுவர வேண்டும். தேவையுள்ள அனைத்து மீனவர்களுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு வேளாண் படிப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். எனது தொகுதியான திருவாடானையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.