RCB vs GT : இயல்புநிலைக்குத் திரும்பியதா RCB? ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் – எப்படி வென்றது குஜராத்?

‘பெங்களூரு Vs குஜராத்’

சின்னச்சாமி மைதானத்தில் முதல் ஆட்டத்தை ஆடி முடித்திருக்கிறது பெங்களூரு அணி. ‘உன் ஆளுங்கள பார்த்தா எதிரிக்குதான் பயம். என் ஆளுங்களை பார்த்தா எனக்கே பயம்.’ இந்த டோனில்தான் பெங்களூரு அணிக்கு சின்னச்சாமி மைதானம் இருக்கும். இன்றும் எந்த வித்தியாசமும் இல்லை. என்ன வழக்கம்போல இங்கே பரிதாபமாகத் தோற்காமல், கொஞ்சம் போட்டியளித்து தோற்றிருக்கிறார்கள்.

RCB vs GT
RCB vs GT

குஜராத் அணியின் கேப்டன் கில் டாஸை வென்றிருந்தார். சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். அதிலேயே ரஜத் பட்டிதர் கொஞ்சம் அப்செட்தான். அவரும் சேஸ் செய்ய வேண்டும் என்றே நினைத்திருந்தார். ஏமாற்றத்தோடு பெங்களூரு அணி பேட்டிங்கைத் தொடங்கியது. சின்னச்சாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் கட்டாயம் 200+ ஸ்கோரை பெங்களூரு எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கணிப்பாகவும் இருந்தது.

‘திணறி மீண்ட பெங்களூரு!’

ஆனால், குஜராத் பௌலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பெங்களூரு அணியைக் கட்டுப்படுத்தினர். பெங்களூரு அணி 169 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த ஸ்கோரை எடுப்பதே அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. பவர்ப்ளேயிலேயே பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. விராட் கோலிதான் முதல் விக்கெட்டாக வீழ்ந்திருந்தார். அர்ஷத் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஃபுல்லாக வீசி விட்டு அடுத்த பந்தையே ஷார்ட்டாக வீச அரைகுறையாக ஷாட் ஆடி ஸ்கொயரில் அவுட் ஆகினார்.

Siraj
Siraj

சிராஜ் தான் மாஸ் காட்டினார். இத்தனை ஆண்டுகளாக பெங்களூருவுக்காகத்தான் ஆடியிருந்தார். இப்போது பெங்களூருவுக்கு எதிராக ஆடுகிறார். சின்னச்சாமியில் அவரது அனுபவம் எப்படிப்பட்டது என்பதைக் காண்பித்தார். குட் லெந்தாக வீசி வீசி செட் செய்து விட்டு திடீரென 140+ இல் வீசி பேட்டர்களை திணற வைத்தார். இப்படி வீசப்பட்ட பந்தில்தான் தேவ்தத் படிக்கலும் பில் சால்ட்டும் போல்டை பறிகொடுத்து வெளியேறினர்.

சிராஜ், அர்ஷத், பிரஷித் கிருஷ்ணாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பெங்களூரு அணி பவர்ப்ளேயில் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பவர்ப்ளே முடிந்த பிறகும் ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தாமல் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே கில் வீசினார். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. பார்மில் இருந்த ரஜத் பட்டிதரை 12 ரன்களில் இஷாந்த் சர்மா lbw ஆக்கினார். இதன்பிறகுதான் ஜித்தேஷ் சர்மாவும் லிவிங்ஸ்டனும் கூட்டணி அமைத்தனர். ஜித்தேஷ் சர்மா உள்ளே வந்த முதல் பந்திலேயே ரேம்ப் ஷாட்டுக்கு முயன்றார்.

Livingstone
Livingstone

‘கவனம் ஈர்த்த சாய் கிஷோர்!’

ஆரம்பத்திலிருந்தே துடிப்பாக இருந்தார். லிவிங்ஸ்டன் கொஞ்சம் நின்று Run a Ball இல் ஆடினார். இடையில் இஷாந்த் சர்மாவின் ஒரு ஓவரை ஜித்தேஷ் சர்மா அடித்தி வெளுத்து 17 ரன்கள் சேர்த்தார். உடனே கில் மனம் மாறி ஸ்பின்னர்களுக்கு ஓவரை கொடுத்தார். சாய் கிஷோரும் ரஷீத் கானும் வீசினர். சாய் கிஷோர் ஒரு பக்கம் கட்டுக்கோப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தி அழுத்தம் ஏற்றினார். இவர் ஓவரில் லிவிங்ஸ்டனுக்கு ராகுல் திவேதியா ஒரு கேட்ச்சையும் கோட்டைவிட்டார். ஆனால், இன்னொரு பக்கம் ரஷீத் கானை புரட்டியெடுத்தனர்.

லிவிங்ஸ்டனே லெக் சைடில் மடக்கி மடக்கி சிக்சராக்கினார். அதேநேரத்தில் சாய் கிஷோர் வேகத்தை கூட்டியும் குறைத்தும் வீசி தடுமாற செய்தார். ஜித்தேஷ் சர்மாவை பெரிய ஷாட் ஆட வைத்து 33 ரன்களில் அவுட் ஆக்கினார். க்ரூணால் பாண்ட்யாவுக்கு கேரம் பந்தை போல ஒரு பந்தை வீசி அவரே கேட்ச் பிடித்து வெளியேற்றினார். 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

Livingstone
Livingstone

அரைசதத்தை கடந்திருந்த லிவிங்ஸ்டனை சிராஜ் ஒரு ஸ்லோயர் ஒன்னில் எட்ஜ் ஆக்கி வீழ்த்தினார். கடைசியில் பிரஷித் கிருஷ்ணாவின் ஓவரில் டிம் டேவிட் கொஞ்சம் அதிரடி காட்ட பெங்களூரு அணி 169 ரன்களை எட்டியது.

குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு. சின்னச்சாமி மைதானத்தில் 170 ரன்கள் என்பது எளிதான டார்கெட். ஆனாலும் பெங்களூரு அணி முழுவதுமாக நம்பிக்கையிழக்கவில்லை. கொஞ்சம் போராடியே பார்த்தனர்.

‘குஜராத் சேஸிங்’

ஓப்பனிங்கில் சாய் சுதர்சனும் கில்லும் கொஞ்சம் தற்காப்பாகவே தொடங்கினர். புவேனேஷ்வர்குமாரும் ஹேசல்வுட்டும் மிகச்சிறப்பாக வீசினர். புவி ஒரு ஃபுல் லெந்த் பந்தில் கில்லின் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். பவர்ப்ளேயில் 42 ரன்களை மட்டுமே குஜராத் எடுத்திருந்தது. சாய் சுதர்சனும் பட்லரும் இதன்பிறகு கொஞ்சம் வேகமெடுத்து டார்கெட்டை நோக்கி நகர்த்தி சென்றனர். இருவரும் இணைந்து 75 ரன்களை அடித்திருந்தனர்.

Buttler
Buttler

ராசிக் சலாம், யாஷ் தயாள் போன்றோரின் ஓவரில் சாய் சுதர்சன் பவுண்டரிக்களை குறி வைக்க, பட்லர் சிக்சர்களாக பறக்கவிட்டார். போட்டியை கையைவிட்டு செல்லும் சூழலில் 13 வது ஓவரில் ரஜத் பட்டிதர் இரண்டாவது பந்தை எடுத்து ஹேசல்வுட்டின் கையில் கொடுத்தார். ஹேசல்வுட்டும் 49 ரன்களில் இருந்த சாய் சுதர்சனை ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் வீழ்த்திக் கொடுத்தார். அதன்பிறகு, பெங்களூரு பௌலர்கள் கொஞ்சம் டாட்களை வீசினர். ஆனால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிக்சர்களை பறக்கவிட்டார். புவியின் ஓவரிலேயே விதவிதமாக ஷாட் ஆடினார். பட்லர் 39 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்தார். அவரின் அதிரடியால் 17.5 ஓவர்களிலேயே குஜராத் டார்கெட்டை எட்டியது.

Gujarat
Gujarat

பெங்களூரு அணி தோற்றிருக்கிறது. ஆனால், பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே போட்டியளிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. அதுவே ஒரு பாசிட்டிவ்வான விஷயம்தான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.