‘குஜராத் வெற்றி!’
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

குஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். சிராஜூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
‘உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்!’
ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு சிராஜ் பேசுகையில், ‘போட்டிக்கு முன்பாக நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். நான் பெங்களூரு அணிக்காக 7 சீசன்களாக சின்னச்சாமி மைதானத்தில் ஆடியிருக்கிறேன். சிவப்பு ஜெர்சியிலிருந்து நீல ஜெர்சிக்கு மாறுவது உணர்ச்சிமிகு தருணமாகத்தான் இருந்தது. ஆனால், நான் பந்தை கையில் எடுத்தவுடன் எல்லாமே மாறிவிட்டது, இயல்பாகிவிட்டேன்.

நான் சீராகத்தான் ஆடிக்கொண்டிருந்தேன். இடையில் கொஞ்சம் போட்டிகளில் ஆடாமல், ஓய்வு கிடைத்தபோது என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன். உடல்தகுதியை மேம்படுத்திக் கொண்டேன். குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டவுடனேயே நெஹ்ராவிடம் பேசினேன். ‘நீ உன்னுடைய இயல்பில் அனுபவித்து ஆடு!’ எனக் கூறினார்.
இஷாந்த் சர்மாவும் நான் எந்த லைன் & லெந்த்தில் வீச வேண்டும் என்பதைப் பற்றி அறிவுரை கூறினார். முழுமையாக நம்பிக்கை நிறைந்த மனநிலையில் இருக்கிறேன். பிட்ச்சை பற்றி கவலையேப்படாமல் பந்துவீச வேண்டும் என நினைக்கிறேன். நான் ரொனால்டோவின் ரசிகன். அதனால்தான் விக்கெட் எடுத்துவிட்டு அப்படி கொண்டாடுகிறேன்.’ என்றார்.