“கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், மலைகளில் உள்ள புல்வெளிக்காடுகளில் வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த உயிரினம், மெள்ள மெள்ள கீழிறங்கி மனிதர்களை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், வெயிலோ அனல் கக்கும். அங்கு பெருமழையின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். காற்றின் வேகமும் பனியின் குளிரும் தாங்க முடியாததாக இருக்கும். பல்லாயிரம் வருடங்களாக இத்தனை சவால்களையும் எதிர்கொண்டே வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த உயிர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், வால்பாறை கொண்டை ஊசி வளைவுகளின் வழியே கீழிறங்கி மனிதர்களுக்கு நெருக்கமாக வர ஆரம்பித்திருக்கிறது. அவர்களும், போகிற போக்கில் அவற்றுக்கு பிஸ்கட்டுகளை சாப்பிடக் கொடுக்கிறார்கள். இதன் விளைவு என்னவாகும் தெரியுமா?

குரங்குகளுக்கு தின்பண்டம் கொடுத்துப்பழக்கியதால்தான், அவை மனிதர்களிடம் ‘ஏதாவது கொடுங்களேன்’ என்று கையேந்த ஆரம்பித்துவிட்டன. மலையுச்சியில் இருந்து இறங்கி வர ஆரம்பித்துவிட்ட இந்த விலங்குகளின் நிலைமையும் கூடிய விரைவில் குரங்கைப்போலவே ஆகலாம். கொண்டை ஊசி வளைவுகளில் நின்றபடியே உணவுக்கும் குடிநீருக்கும் மனிதர்களை நம்ப ஆரம்பிக்கலாம். மனிதர்களை நெருங்க ஆரம்பித்திருக்கிற இந்த விலங்கு, இப்படியே பழகிவிட்டால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உயரமான மலைக்காடுகளில் தகவமைத்துக்கொண்டிருந்த தங்கள் மரபணுவையே இழந்துவிடலாம். காலநிலை மாற்றம் இந்தளவுக்கு அந்த விலங்கை பாதித்துக்கொண்டிருக்கிறது. அந்த விலங்கின் பெயர் வரையாடு” என்றபடி நம்மிடம் வரையாடுகள் பற்றி பேச ஆரம்பித்தார், காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம்.
”பார்ப்பதற்கு மான் போலவே இருந்தாலும் வரையாடுகள், ஆட்டினம்தான். சங்க இலக்கியங்கள் இதை ‘வருடை’ என்று குறிப்பிடப்படுகின்றன. வரையாடுகள் நீண்ட நெடுங்காலமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரம்.

ஏன் வரையாடை மாநில விலங்காக அறிவித்திருக்கிறார்கள் என்றால், வரையாடுகள் நீலகிரி உயிர்க்கோளத்தில் தோன்றி, அந்த உயிர்க்கோளத்தில் மட்டுமே வாழ்ந்து வருபவை. அதனால்தான் வரையாடுகளை ‘ஓரிட வாழ்வி’ என்கிறோம். அதனால்தான் அதை தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்றும் சொல்கிறோம். தேனி, வால்பாறை, நீலகிரி, மூணாறு அருகேயுள்ள ராஜமாலா மலைகள், அக்காமலை, இரவிக்குளம் தேசியப்பூங்கா, ஆனை மலை புலிகள் காப்பகம் ஆகியவைதான் வரையாட்டின் முக்கியமான வாழ்விடங்கள்.
தங்கள் இனத்தின் பிரதான எதிரிகளான சிறுத்தையிடமிருந்தும் செந்தாய்களிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வதற்காக, தங்களுடைய உடலின் நிறத்துக்கு ஒப்பான பாறைகள் நிறைந்த இயற்கை சூழலில்தான் வரையாடுகள் வாழும். இவை பாறை நிறத்தில் இருப்பதால், அங்கு வாழ்கிற பழங்குடிகள் வரையாடுகளை ‘பாறை ஆடுகள்’ என்று குறிப்பிடுகின்றனர். செங்குத்தான பாறைகளில் ஏறி இறங்குகிற அளவுக்கு இவற்றின் காலடிக்குளம்புகள் இருக்கின்றன. நம்முடைய உள்ளங்கை அகல பாறையில்கூட தன்னுடைய நான்கு கால்களையும் ஒன்று சேர்த்து நிறுத்துகிற அளவுக்கு பேலன்ஸ் வரையாடுகளுக்கு உண்டு.

வரையாடுகள் ஒருவகையில் யானைகளைப்போல… யானைக் குடும்பத்தை மூத்தப் பெண் யானைகள் வழிநடத்துவதுபோல, வரையாட்டு மந்தைகளையும் மூத்த பெண் வரையாடுகள்தான் வழிநடத்தும். ஆண் வரையாடுகள் பெண் வரையாடைவிட எடை அதிகமாக, கூர்மையான கொம்புகளைக்கொண்டு வலுவாக இருந்தாலும் மந்தைகளைக் காக்கும் பொறுப்பை அவை எடுத்துக்கொள்வதில்லை. ஆண் வரையாடுகள் தனித்து வாழவே விரும்புகின்றன.
ஒரு மந்தையில் இருக்கிற வயதில் முதிர்ந்த பெண் வரையாடு தன் மந்தையை எப்படிக் காக்கிறது தெரியுமா? மற்ற வரையாடுகள் இளைப்பாறுகிறபோது, இந்த பெண் ஆடு பாறைகளின் உச்சியில் நின்றுகொண்டு சிறுத்தை வருகிறதா; செந்நாய் வருகிறதா; அவற்றின் வாடை காற்றின் எந்த திசையிலாவது வருகிறதா என்பதை கவனித்தபடியே இருக்கும். அப்படி ஏதாவது வேட்டையாடி வருகிறது என்று தெரிந்தால், உடனே மற்ற வரையாடுகளை உஷார்ப்படுத்தி விடும். அதை எப்படி செய்யும் தெரியுமா?

பொதுவாக ஆடுகள் மே… என்றுதானே கத்தும். ஆனால், வரையாடுகள் அப்படி கத்தாது. சீழ்க்கை ஒலிகளையொத்த ஒலியைத்தான் எழுப்பும். தன் மந்தையை எச்சரிக்கை செய்ய, கவனப்படுத்த, அழைக்க, பதுங்க செய்ய, ஓடச்செய்ய என ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனி சீழ்க்கை ஒலிகளை எழுப்பும். இதுதான் வரையாடுகளின் மொழி.
சிறுத்தை, செந்தாய்களைவிட காலநிலை மாற்றமே வரையாடுகளின் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக தற்போது இருக்கிறது. 3 ஆயிரம் அடிகளுக்கு மேல் மலைக்காடுகளில் இருந்த அவற்றின் வாழ்விடங்கள் தேயிலைத்தோட்டங்கள், காபித்தோட்டங்கள் என வெகுவாக சுருங்கி வருவதால், வரையாடுகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. தற்போது இரவிக்குளம் தேசிய பூங்காவில் 80 வரையாடு குட்டிகள் புதிதாக பிறந்துள்ளன என்கிற செய்திதான் சின்னதாக நிம்மதி தருகிறது” என்கிறார் கோவை சதாசிவம்.