காரல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: 110-விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காரல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை மற்றும் பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110- விதியின் கீழ் அவர் அறிக்கை வெளியிட்டு பேசியதாவது: உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்த அரசு விரும்புகிறது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்தவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ். ‘இழப்பதற்கென்று எதுவுமில்லை – பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது’ என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர். அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள், பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.

உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான். அப்படிப்பட்ட, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சிந்தனையோடுதான், அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14-ம் தேதி, நமது பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தோம்.

இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் அவர்தான். “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற புவியியல் ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம். இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்” என்று எழுதியவர் காரல் மார்க்ஸ்.

அதனால்தான் மார்க்ஸ் – எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து 1931-ம் ஆண்டே வெளியிட்டார் தந்தை பெரியார். அத்தகைய மாமேதை மார்க்ஸின் உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது.

மணிமண்டபம்: அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையா தேவருக்கு நாளை 103-ஆவது பிறந்தநாள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி அவர் பிறந்தார். இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் மூக்கையா தேவர். 1971-ம் ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர். ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக வென்று மக்கள் நாயகனாக வளர்ந்தவர்.

கடந்த 1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றபோது அண்ணாவுக்கு தோள் கொடுத்தவர் பி.கே.மூக்கையாத் தேவர். அப்போது இந்தப் பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராக இருந்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவரும் அவர்தான். தேவர் சமுதாய மக்களுக்காக கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று முதல்வர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தவர் அவர். அதனால்தான் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் திமுக ஆட்சியில் அப்போது அமைக்கப்பட்டன. பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரவேற்று பேசினர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பாமக நிறுவனர் ராமதாஸ், திக தலைவர் கி.வீரமணி, தவாக தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.