“தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசினார்.

மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற சிறப்புக் கருத்தரங்கம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக அமைச்சர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
பிரகாஷ் காரத் பேசும்போது, “இந்திய சுதந்திரத்திற்குப் பின் எப்போதும் இல்லாத அளவில் கூட்டாட்சி தத்துவத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசுகள் மீது ஆளுநர்களின் தலையீடுகள் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் நடந்துள்ளன. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசின் செயல்பாடுகளில் தலையீடு செய்கிறார்கள்.

இயற்கை பேரிடர்களில்கூட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. தமிழகம் பேரிடர்கள், வயநாடு நிலச்சரிவுக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை. அரசமைப்பு, கூட்டாட்சி, ஜனநாயகத்திற்கு இந்த ஆட்சியில் பெரிய அச்சுறுத்தல் உள்ளது.
தொகுதி மறுவரையரை நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும். மாநில பல்கழைக்கழக துணை வேந்தர்களை ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.” என்றார்.