மதுரை: “மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு கருத்தரங்கில் கட்சியின் அகில இந்திய பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியது: “இந்தியாவில் கூட்டாட்சி மீதும், மாநில உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுனர்களை தூண்டி விட்டு விளையாடுகின்றனர். பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களுக்கு பேரிடர் காலங்களில் நிவாரண நிதி வழங்குவதில்லை. மாநிலங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை கூட வழங்குவதில்லை.
கர்நாடக மாநிலம் வறட்சி நிவாரணத்துக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியை பெற மத்திய அரசுடன் போராடி வருகிறது. இவ்வாறு கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக முதல்வர் கடுமையாக குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் தென் மாநில நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு நடைபெற்றால் தென் மாநிலங்களில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை கனிசமாக குறையும். ஆர்எஸ்எஸ் துணை வேந்தர்களை தேர்வு செய்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறது. அதற்கு ஏற்றவாறு யூஜிசி விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் மதசார்பின்மை தத்துவம் மற்றும் ஜனநாயகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும். இந்தியா ஒற்றுமையுடன் இருக்க அனைவரும் பாடுபட வேண்டும்,” என்றார்.
கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் பேசுகையில், “77 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கூட்டாட்சி தத்துவம் தற்போது தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மாநிலங்களுக்கான வரி பங்கு தொகையை முறையாக விடுவிப்பதில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை மதிப்பதில்லை.
பாஜகவிடம் இருந்து கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும். மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை பாக்கி வைக்காமல் முழுமையாக விடுவிக்க வேண்டும். நிதிக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது” என்றார்.
மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், அதன் குருபீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பும் எப்போதும் மாநிலங்களை அனுமதித்ததில்லை. மாநிலங்களை அழித்து ஒரே நாடு, ஒரே அதிகாரம், ஒரே தலைவர் என்ற கொள்கையை நோக்கி நடைபோடுகிறார்கள். இதற்காக எல்லாவற்றையும் மாற்றி நினைக்கின்றனர். ஒற்றை கலாச்சாரத்தை திணித்து வரலாற்றை தலைகீழாக புரட்டிப்போட ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. இந்தியா முழுவதும் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மகாத்தான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்,” என்றார்.
– கி.மகாராஜன்/ என்.சன்னாசி