மதுரை: “இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஏப்.1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-வது நாளான இன்று ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்ட செயலாள் மா.கணேசன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நோக்கவுரையாற்றினார்.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “மதுரை நகரை தூங்கா நகரம் என்று சொல்வோம். அந்த தூங்கா நகரம் இன்று சிகப்பு மாநகரமாக மாறியுள்ளது. எங்கும் சிகப்பு நிறைந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். திமுக கொடியில் பாதி சிகப்பு உள்ளது. கொடியில் மட்டும் இல்லை. எங்களில் பாதி நீங்கள். திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் இடையே கருத்தியல் நட்பு உண்டு. அதன் அடையாளமாகத் தான் இங்கு வந்திருக்கிறேன்.
தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என அடையாளப்படுத்தி கொண்டவர் கருணாநிதி. காரல் மார்க்சுக்கு சிலை வைப்பதாக அறிவித்து விட்டு உங்களில் பாதியாக இங்கு வந்திருக்கும் என் பெயர் ஸ்டாலின். நமது பயணமும் பாதையும் மிக நீண்டது. 2019 முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். யாரை எதிர்க்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என சிலர் நப்பாசையில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. இங்கு இருக்கிற யாரும் அதற்கு இடம் தர மாட்டோம்.
கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகி விட்டது. மத்திய அரசால் அதிகம் பாதிக்கப்படுவது நானும், கேரள முதல்வரும் தான். எனவே, எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம். மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளை பறிக்க பார்க்கிறது. பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறார்கள். ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையை எடுத்துக்கொண்டனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிறைவேற்ப்படும் சட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.
எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக மாநிலத் தலைவர்கள் போல் செயல்பாட்டு முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறீர்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறீர்கள். வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். இந்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்பது தான். அதனால் தான் ஒன்றிய அரசு என்கிறோம். சட்டத்தில் இல்லாததை கூறவில்லை. இதையே அவர்களால் தாங்க முடியவில்லை. அதிகார பரவலாக்கலை அவர்கள் விரும்பவில்லை.
கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு. இதனால் 25 ஆண்டுகளுக்கு இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மாநில சுயாட்சி எங்கள் உயிர் கொள்கை. கூட்டாட்சிக்கு எதிரான பாசிச அரசாக மத்திய அரசு இருக்கிறது. மோடியின் ஆட்சி தான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தி ஆக வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும்.
மத்திய – மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த சர்க்காரியா, பூஞ்சி கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என 2012-ல் முதல்வராக இருந்த மோடி கோரிக்கை வைத்தார். மூன்றாம் முறையாக பிரதமராகி உள்ள மோடி அவர்களே, அந்த கோரிக்கையை நிறைவேற்ற நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? இதற்கு தமிழகத்துக்கு வரும் போது பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும். மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில் தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவோம். இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினர்.
– கி.மகாராஜன்/ என்.சன்னாசி