வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்துவந்த திமுக எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
நாடாளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று பங்கேற்க வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
இவர்களுடன் முதல்வர் ஸ்டாலினும் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தலைமைச் செயலக வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுக்கு, திமுக எம்எல்ஏ செங்கம் கிரி கருப்பு பேட்ஜ்களை வழங்கிக் கொண்டிருந்தார், அப்போது, அவ்வழியாக சென்ற அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு பேட்ஜ்களை வழங்க முற்பட்டார். ஆனால் அவற்றை வாங்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து, சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென திமுக எம்எல்ஏக்கள் வெளியே வந்து தலைமைச் செயலக வளாகத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி ‘இஸ்லாமியர்களை நிராகரிக்காதே, இஸ்லாமியர்களை அழிக்காதே’ என கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் திமுக எம்எல்ஏ இ.பரந்தாமன் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பலம் உள்ளது என்ற காரணத்தினால், ஜனநாயகத்தின் குரல்வளைகளை நெரித்து, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை மதிக்காமல் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் வரலாற்று பிழையை பாஜக செய்துள்ளது. சிறுபான்மையின மக்கள் பக்கம் திமுக என்றும் நிற்கும் என்பதை உறுதியளிக்கும் விதமாக இந்த கருப்பு பேட்ஜ் அணியும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.