வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் இஸ்லாமியர்களுடன் இணைந்து போராடுவோம் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. ‘வக்பு வாரியச் சட்டம்’ என்பது, இஸ்லாமியர்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூக பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது.
வக்பு வாரியச் சட்டத்தை சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன? கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கூட்டணி கட்சிகளின் துணையோடு, எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள், மக்களின் தன்னெழுச்சி மூலம் எதிர்கொண்ட விளைவுகளை வரலாறு முழுக்க நாம் பார்த்திருக்கிறோம்.
மத்திய பாஜக அரசு சொல்வதுபோல, இது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதை தாக்கல் செய்யக்கூட, அவர்களிடம் ஏன் இஸ்லாமிய பிரதிநிதி ஒருவர்கூட இல்லை. ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்க போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்? இதுதான், இன்று பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல். இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் ஜனநாயக சக்திகளும் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகமும் தனது பொதுக் குழுவில் அதே கருத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ள மத்திய பாஜக அரசுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் வன்மையான கண்டனங்கள்.
ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும். பாஜக அரசு இதைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்று போராடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று போராட்டம்: இந்நிலையில், வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.4) அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.