புதுடெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தை அவர் தொடங்கிவைத்து பேசியதாவது: வக்பு வாரியத்திடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால் இந்த சொத்துகளால் ஏழை முஸ்லிம்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வக்பு சொத்துகள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டில் சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது வக்பு வாரியங்களிடம் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தன. அவற்றின் மூலம் ரூ.163 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது.
வக்பு சொத்துகளை முறையாக நிர்வகித்து இருந்தால் ரூ.12,000 கோடி வரை வருவாய் ஈட்டியிருக்க முடியும். தற்போது வக்பு வாரியங்களிடம் 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை முறையாக நிர்வகித்தால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டே வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்க பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரிஜிஜு பேசினார். கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சையது நசீர் ஹூசைன் பேசும்போது, “கர்நாடக வக்பு வாரியத்தில் நான் 6 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். சொத்து விவகாரங்களில் பிரச்சினை எழுந்தபோது வக்பு வாரியம் நியாயமாக செயல்பட்டது. எந்த சொத்தையும் அபகரிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
பாஜக எம்பி ராதா மோகன் தாஸ் அகர்வால் பேசும்போது, “முஸ்லிம்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஏழை முஸ்லிம்கள் மற்றும் முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் பேசும்போது, “கர்நாடக வக்பு வாரிய நிலங்களில் ஊழல் நடைபெற்றிருக்கிறது.இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார். இதற்கு கார்கே பதில் அளித்த போது, “நானோ, எனது குடும்பத்தினரோ வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் ஓர் அங்குலத்தைகூட ஆக்கிரமிக்கமில்லை. என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா ? இல்லையெனில் அனுராக் தாக்குர் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசும்போது, “வக்பு திருத்த மசோதா குறித்து பேசுவதற்கு பதிலாக, அயோத்தி ராமர் கோயில், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல், மலையாள திரைப்படம் குறித்து அவையில் சிலர் பேசிக் கொண்டு இருக்கின்றனர். கூட்டுக்குழுவில் 200 மணி நேர ஆலோசனைக்கு பிறகே வக்பு திருத்த மசோதா இறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் நலனுக்காகவே மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேரளாவின் வயநாட்டில் 4.7 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறது. அந்த தொகுதி எம்பி (பிரியங்கா காந்தி) மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அப்பகுதி மக்கள் வக்பு வாரியத்துக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தி உள்ளனர். மத்திய அரசின் உதவியை நாடுகின்றனர்” என்று தெரிவித்தார். ஆளும் பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 37 பேர் விவாதத்தில் பங்கேற்று பேசினர். நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது.
12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்தைத் தொடர்ந்து மின்னணு முறையில் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்ததாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.