புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்றுமுன்தினம் நிறைவேறியது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கூறும்போது, “மசோதாவின் புதிய விதிகளின்படி, முஸ்லிம்களுக்கு நன்மையை விட தீமைகள் அதிகம். மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்” என்று கூறியுள்ளது.
வாரியத்தின் மூத்த நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹலி கூறுகையில், “தனிச்சட்ட வாரியம் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள் இந்த மசோதா குறித்த தங்கள் குறைகளை நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் தெரிவித்துள்ளன. அவற்றில் ஒன்று கூட பரிசீலிக்கப்படவில்லை” என்றார்.
உ.பி,யின் பரேலியில் உள்ள இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவர் மவுலானா தவுகீர் ராசா கூறும்போது, “இத்தகைய தவறான சட்ட திருத்தங்களை நாங்கள் அங்கீகரிக்க முடியாது. மசோதாவுக்கான எதிர்ப்பு போதுமானதாக இல்லை. வக்பு சொத்துகளில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு செய்ததாக எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
சொத்துகள் பறிக்கப்படும்: ஆனால் எங்கள் முன்னோர்கள் தங்கள் சொத்துக்களை வக்புக்கு அர்ப்பணித்தனர். அதையே, பல முஸ்லிம் ஆட்சியாளர்களும் செய்தார்கள். இதுவன்றி கோயில்களை கட்டியதுடன் அவர்களுக்கு சொத்துகளையும் நன்கொடையாக அளித்தனர். இப்போது, முஸ்லிம்களிடம் இருந்து வக்பு சொத்துகள் பறிக்கப்படுகின்றன” என்றார்.
அச்சுறுத்தல் இல்லை: அதேநேரத்தில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா சகாபுதீன் ரிஸ்வி கூறும்போது, “இந்த மசோதாவால் முஸ்லிம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த மசோதா நன்மைகளையே தரும். சில அரசியல் குழுக்கள் இந்த மசோதா குறித்து தேவையற்ற அச்சத்தைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றனர். முஸ்லிம்களின் மசூதிகள், ஈத்காக்கள், தர்காக்கள் மற்றும் கல்லறைகள் எதுவும் பறிக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன். இது வெறும் வதந்தி மட்டுமே” என்றார்.