புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்த நிலையில், அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.
மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தற்போது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களான முகமது காசிம் அன்சாரி, முகமது நவாஸ் மாலிக் இருவரும் கட்சியிலிருந்து விலகுவதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இருவரும் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “ எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள், நீங்கள் முற்றிலும் மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் உரிய மரியாதையுடன் கூற விரும்புகிறேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை உடைந்துவிட்டது. இந்திய முஸ்லிம்களும் எங்களைப் போன்ற தொண்டர்களும் கட்சியின் நிலைப்பாட்டால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மசோதா அரசியலமைப்பின் பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்த மசோதாவின் மூலம், இந்திய முஸ்லிம்கள், அவமதிக்கப்படுகிறார்கள். நீங்களோ அல்லது உங்கள் கட்சியோ இதை உணரவில்லை. என் வாழ்நாளில் பல வருடங்களை கட்சிக்காகக் அர்ப்பணித்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மசோதாவின் திருத்தங்கள் என்ன? – மத்திய வக்பு கவுன்சிலில் உள்ள 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்க வேண்டும். மாநில வக்பு கவுன்சிலில் உள்ள 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும். 2013-க்கு முன்பு இருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.
வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.
வக்பு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்பு சொத்து விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.