Rishabh Pant Latest News : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் இந்த சீசன் முழுவதும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் ரிஷப் பந்த் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு போட்டியில் டக் அவுட் ஆகியிருக்கும் அவர், 3 போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 17 ரன்கள் எடுத்திருக்கிறார். இதனால் அவர் மீது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் எதிர்பார்த்த பங்களிப்பை இதுவரை அவர் கொடுக்கவில்லை.
அதேநேரத்தில் அந்த அணியில் இருக்கும் நிக்கோலஸ் பூரன் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் அவர் இருக்கிறார். ஒருவேளை இதே பார்மில் ரிஷப் பந்த் இருந்தார் என்றால் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்தும் லக்னோ அணி தூக்கிவிடும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். ஏனென்றால் அந்த அணியின் உரிமையாளர் கோயங்கா, ஏற்கனவே கேஎல் ராகுல் உள்ளிட்டோரிடம் கரடுமுரடான அணுகுமுறையை காட்டிருக்கிறார் என்பதால் அதனை ரிஷப் பந்திடம் காட்டவும் தவறமாட்டார்.
லக்னோ அணியும் தோல்விகளை சந்தித்து, ரிஷப் பந்தும் மோசமான பார்மில் தொடர்ந்தால் கோயங்கா நிச்சயம் புதிய கேப்டனை லக்னோ அணிக்கு நியமித்துவிடுவார் என்கின்றனர் விமர்சகர்கள். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் பிளேயர் பியூஷ் சாவ்லா பேசும்போது, ரிஷப் பந்த்துக்கு அதிக தொகை கொடுக்கப்பட்டது அவருடைய பார்மை பாதிக்காது, ஏனென்றால் பந்த் இப்போது பார்மிலேயே இல்லை என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பியூஷ் சாவ்லா, ” எனக்கு ரிஷப் பந்தை நன்றாக தெரியும். அவருக்கு அதிக தொகை கொடுத்து லக்னோ அணி வாங்கியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அந்த தொகை அவருடைய ஆட்டத்தின் திறனை பாதிக்கும் என்று நான் சொல்லமாட்டேன். உண்மையில் ரிஷப் பந்த் இப்போது பார்மிலேயே இல்லை. அண்மைக்காலமாக ரிஷப் பந்த் இந்திய அணியில் வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் சேர்க்கப்படுவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தான் விளையாடுகிறார்.
அதனால் நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் வெள்ளைப் பந்துகளை விளையாடுகிறார். பார்ம் அவுட்டில் இருக்கிற நேரத்தில் ஐபிஎல் தொடரில் அணியின் தலைவராகவும் இருக்கிறபோது, உண்மையிலேயே கடினமான சூழல் தான். ஆனால் இதனை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது தெரியவில்லை. ரிஷப் பந்தால் சிறப்பாக விளையாட முடியும் என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என்று எனக்கு தோன்றவில்லை.” என கூறியுள்ளார்.