புதுடெல்லி: “வக்பு சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று 2013-ம் ஆண்டே கூறியவர் லாலு பிரசாத் யாதவ்” என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இன்று மாநிலங்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய கிரண் ரிஜிஜு வக்பு திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். “வக்பு திருத்த மசோதாவை நாங்கள் மேலும் உள்ளடக்கியதாக மாற்றுகிறோம். வக்பு வாரியத்தில் அனைத்து பிரிவு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது.
முன்மொழியப்பட்ட மத்திய வக்பு வாரியத்தில் மொத்தம் 22 உறுப்பினர்களில், நான்கு பேருக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். மாநில வக்பு வாரியங்களில், 11 உறுப்பினர்களில், மூன்று பேருக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது” என கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.
அமித் ஷா கருத்து: மசோதாவை ஆதரித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வக்பு திருத்த மசோதாவானது முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன. மசோதாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ அவர்கள் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.
வக்பு என்பது அல்லாவின் பெயரால் மதத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது. இதனை திரும்பப் பெற முடியாது. நன்கொடைகளை ஒருவர் தனது சொந்த சொத்திலிருந்து மட்டுமே செய்ய முடியும். அரசாங்க நிலத்தை தானமாக அளிக்க முடியாது. வக்பு சொத்துகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2013ம் ஆண்டு வலியுறுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற உங்களால் (காங்கிரஸ்) முடியவில்லை என்றாலும், நரேந்திர மோடி நிறைவேற்றினார்” என தெரிவித்தார்.
மேலும், வக்பு சொத்து நிலையை நிர்ணயிப்பதில் மாவட்ட ஆட்சியரின் பங்கு குறித்து குறிப்பிட்ட அமித் ஷா, “இது அனைத்து நில பரிவர்த்தனைகளுக்கும் நிலையான நடைமுறை. வக்பு சொத்தாக அறிவிக்கப்படும் நிலம் அரசுக்கு சொந்தமானது அல்ல என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்” என்றார். வக்பு மசோதாவுக்கு ஆதரவாக லாலு பிரசாத் யாதவ் பேசும் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, “அவரது வீடியோ திருத்தப்பட்டது. நீங்கள் முழு வீடியோவையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
முன்னதாக, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தற்போது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.