“வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்…” – தவெக தலைவர் விஜய்

சென்னை: ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து அரசியலமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் வழிபாட்டு முறையிலான பண்பாட்டு வாழ்வைப் பின்பற்றும் அனைத்து உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம், இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டங்கள் வழியே அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது. வக்பு வாரியச் சட்டம் என்பது, முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டத்தின் முக்கிய அமைப்பு. வக்பு வாரியச் சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?

ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலன்றி வேறென்ன? கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கூட்டணிக் கட்சிகளின் துணையோடு, எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள், மக்களின் தன்னெழுச்சி மூலம் எதிர்கொண்ட விளைவுகளை வரலாறு முழுக்க நாம் பார்த்திருக்கிறோம்.

இஸ்லாமியச் சிறுபான்மையினரின் நலன் காக்கவே இச்சட்டத் திருத்தம், எதிர்க்கட்சியினர் அவர்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்கள் என்ற வெற்று வாதத்தை ஒன்றிய ஆளும் கட்சியினர் முன்வைக்கின்றனர். ஒன்றிய பாஜக அரசு சொல்வது போல, இது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதைத் தாக்கல் செய்யக் கூட அவர்களிடம் ஏன் இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை? ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்கப் போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்?

இதுதான் இன்று பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல். இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் ஜனநாயகச் சக்திகளும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றன. ஒருமித்த குரலில் ஒன்றிய அரசின் செயலைக் கண்டிக்கின்றன.

இந்த மசோதா பற்றிப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு வரலாற்றிலேயே முதன்முறையாக வழக்கத்துக்கு மாறாக, இணக்கமான பரிந்துரைகளை மறுத்தது என்று அக்கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களே குற்றம் சாட்டி உள்ளனர். இது பாஜக அரசின் கொடுங்கோல் அதிகாரம் வேறென்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகமும் தனது பொதுக் குழவில் அதே கருத்தை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக விழுமியங்களையும் மறுத்து தனது பெரும்பான்மைவாத ஆதிக்கத்தின் துணையோடு, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு, தமிழக வெற்றி கழகத்தின் வன்மையான கண்டனங்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகக் குரல்களுக்கும் செவிமடுக்கும் விதமாக ஜனநாயகத்துக்கு விரோதமான இந்தச் சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.