50 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு; தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள் கைது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது.

இதே போல் நாகை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வை பெண் ஒருவர் எழுதினார். தேர்வு அறை கண்காணிப்பாளர், வினா மற்றும் விடைத்தாளை கொடுத்த பிறகு பலரும் தேர்வு எழுதி கொண்டிருந்தனர்.

நாகை தேர்வு மையம்

அப்போது, தனித்தேர்வரான அந்த பெண், மாஸ்க் அணிந்து தேர்வு எழுதினார். இதில் சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர் மாஸ்கை கழட்ட சொல்ல அந்த பெண் கழட்டினார். உடனே ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்துள்ளார்.

அதில் தேர்வு எழுதிய பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அந்த பெண் படபடப்புடன் இருந்துள்ளார். பின்னர், தன்னிடமிருந்த வருகை பதிவு குறிப்பேட்டை பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்ட அந்த பெண்ணுக்கு பதில் வேறு ஒரு பெண்ணின் போட்டோ ஒட்டப்பட்டிருந்தது.

தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம்

ஆள் மாற்றம் நடந்துள்ளது என்பதை உறுதி செய்த கண்காணிப்பாளர், தேர்வு எழுதிய பெண்ணை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்து கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த பெண், நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய செல்வாம்பிகை என்பது தெரியவந்தது. தனது தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்க்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகள் விசாரணை

இது குறித்து கல்வித்துறை வட்டாரத்தில் பேசினோம், செல்வாம்பிகை தாய் சுகந்தி (50) பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவர் தேர்வு எழுதாமல் அவருக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து அவரது மகள் செல்வாம்பிகை தேர்வு எழுதியுள்ளார்.

இதே போல் தமிழ் தேர்வு எழுதியவர் ஆங்கிலத்தேர்வும் எழுதும் போது சிக்கி கொண்டார். சுகந்தி நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமையல் கூடத்தில் ஊழியராக வேலை செய்கிறார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் அவருக்கு அடுத்த நிலைக்கான பதவி உயர்வு கிடைக்கும் என சிலர் சொல்லியுள்ளனர்.

இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்து விண்ணப்பித்துள்ளார். அப்போது காலம் கடந்து போச்சு, இனி எப்படி என்னால் படிச்சு தேர்வு எழுதி பாஸ் ஆக முடியும் என புலம்பியிருக்கிறார்.

வழக்கு பதிவு

ஒரு வேளை பாஸ் செய்து விட்டால் பதவி உயர்வுடன், சம்பளமும் கூடுதலாக கிடைக்கும் ஆனால் அந்த கொடுப்பினை எனக்கு இருக்காதுனு சொல்லியிருக்கிறார்.

உடனே தன் தாய்க்காக ஆள்மாறாட்டம் செய்து செல்வாம்பிகை தேர்வு எழுத முடிவு செய்து எழுதியதில் சிக்கி கொண்டார். செல்வாம்பிகைக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. தற்போது அவர் கர்ப்பிணியாக வேறு இருக்கிறார். ஆனாலும் செய்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.