IPL 2025 KKR vs SRH: ஐபிஎல் 2025 தொடரின் 15வது லீக் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்தாண்டு 2ம் இடம்பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.
KKR vs SRH: இரு அணிகளின் பிளேயிங் லெவன் மாற்றம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். பிளேயிங் லெவனுக்குள் கமிந்து மெண்டிஸ், சிமர்ஜித் சிங் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர். டிராவிஸ் ஹெட் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் மொயின் அலியை உள்ளே கொண்டுவந்தனர்.
KKR vs SRH: தூணாக நின்ற ரஹானே – ரகுவன்ஷி
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு இன்றும் ஓபனிங் சரியாக அமையவில்லை. டி காக் 1 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும், நரைன் 7 ரன்களில் ஷமி பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் ஜோடி சேர்ந்த அஜிங்கயா ரஹானே – அங்கிரிஷ் ரகுவன்ஷி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிக்ஸர் மழை பொழிந்துவந்த ரஹானே ஷீஷன் அன்சாரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர் 27 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 38 ரன்களை அடித்திருந்தார். அதற்கடுத்த சில ஓவர்கிளேயே ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். 32 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரி என 50 ரன்களுடன் கமிந்து மெண்டிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
KKR vs SRH: 91 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதற்கு பின்னர் வெங்கடேஷ் ஐயர் – ரின்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து மிரட்டலான இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். இருவரும் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். இந்த ஜோடி 41 பந்துகளில் 91 ரன்களை எடுத்தது. வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ரஸ்ஸல் கடைசி பந்தில் 1 ரன்னில் ரன்அவுட்டானார்.
இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. ரின்கு சிங் 17 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 32 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் ஷமி, கம்மின்ஸ், ஷீஷன் அன்சாரி, ஹர்ஷல் பட்டேல், கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
KKR vs SRH: பவர்பிளேவில் பொட்டலம்
201 ரன்கள் இலக்கை நோக்கி இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 4, அபிஷேக் சர்மா 2, இஷான் கிஷன் 2 என பவர்பிளேவிலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் பவர்பிளேவில் ஹைதராபாத் அணியால் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 33 ரன்களையே அடிக்க முடிந்தது.
KKR vs SRH: மிடில் ஓவர்களிலும் சரிந்த விக்கெட்டுகள்
நிதிஷ் குமார் ரெட்டி – கமிந்து மெண்டிஸ் ஜோடி 35 ரன்களை எடுத்தது. நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் ரஸ்ஸல் பந்துவீச்சிலும், கமிந்து மெண்டிஸ் 27 ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த அனிகேத் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
KKR vs SRH: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்-அவுட்
10.4 ஓவர்கள் ஹைதராபாத் அணி 75 ரன்களை மட்டுமே எடுத்தது 6 விக்கெட்டுகளை இழந்தது. களத்தில் கிளாசென் நிதானமாக விளையாடி வந்தார். அவருடன் கேப்டன் கம்மின்ஸ் இணைந்தார். ஆட்டம் ஏறத்தாழ கைமீறி போய்விட்ட நிலையில் இந்த ஜோடி நெட் ரன்ரேட்டை அதிகப்படுத்த விளையாடியது எனலாம். கிளாசென் சுனில் நரைன் பந்துவீச்சில் 2 சிக்ஸரை பறக்கவிட, வைபவ் அரோரா வீசிய அடுத்த ஓவரிலேயே 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அவருக்கு பின்னர் கம்மின்ஸ் 14, சிமர்ஜித் 0, முகமது ஷமி 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 16.4 ஓவரகளில் 120 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறது எனலாம். கொல்கத்தா அணி பந்துவீச்சில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
KKR vs SRH: புள்ளிப்பட்டியல் அப்டேட்
புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் கொல்கத்தா 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. கடைசி 10வது இடத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சரிந்துள்ளது. 6வது, 7வது, 8வது, 9வது இடத்தில் முறையே மும்பை, லக்னோ, சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் உள்ளன. பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முறையே முதல் 4 இடத்தில் உள்ளன.