Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா? – MCA-வின் விளக்கம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று இந்தச் சூழலில், ரஞ்சியில் மும்பை அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் மும்பை அணியை விட்டு வெளியேறுவதாகவும், கோவா அணிக்கு விளையாட விரும்புவதாகவும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு (MCA) நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை கிரிக்கெட் சங்கம், ஜெய்ஸ்வாலின் விருப்பத்துக்குச் சம்மதம் தெரிவித்தது. இதன்மூலம், 2025-26 ரஞ்சி சீசனில் கோவா அணிக்கு ஜெய்ஸ்வால் விளையாடவிருக்கிறார். கோவா அணிக்கு அவர் கேப்டனாகக் கூட நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இத்தகைய சூழலில்தான், மும்பைக்காக ஆடிவரும் சூர்யகுமார் யாதவும் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணியை விட்டு வெளியேறவிருப்பதாகவும், கோவா அணியிடம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் பரவியிருக்கிறது.

இந்த நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கம் இதனை மறுத்து விளக்கம் அளித்திருக்கிறது.

இது குறித்து, தனியார் ஊடகத்திடம் MCA செயலாளர் அபய் ஹடப், “மும்பை அணியை விட்டு கோவா அணிக்கு விளையாட சூர்யகுமார் யாதவ் முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகள் MCA கவனத்துக்கு வந்திருக்கிறது. MCA அதிகாரிகள் சூர்யகுமார் யாதவிடம் பேசி, இவை முற்றிலும் ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை என்பதை உறுதிப்படுத்தும்.

மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA)
மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA)

மும்பைக்காக விளையாடுவதில் அவர் உறுதியாக இருக்கிறார். மும்பைக்காக விளையாடுவதைப் பெருமையாக உணர்கிறார். எனவே, இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்துவிட்டு எங்கள் வீரர்களை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.