ஆந்திர தலைமைச் செயலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் மாநில தலைமைச் செயலகம் உள்ளது. இதன் 2-வது பிளாக் பகுதியில் பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
2-வது பிளாக்கில் துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் அமைச்சர்கள் கேஷவ், நாதள்ள மனோகர், துர்கேஷ், ஆனம் ராம் நாராயண் ரெட்டி, நாராயணா ஆகியோரின் அலுவலகங்கள் உள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அதிக சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும் தீ விபத்து ஏற்பட்டதும் அலாரம் ஒலிக்காதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சம்பவ இடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.