இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். முதலில் 26 சதவீத வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டு 27 சதவீத வரி விதிப்பு என்பதை வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், தனிப்பட்ட பரஸ்பர அதிக வரிவிதிப்பான 16 சதவீதம் ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறிவருகிறார். குறிப்பாக, அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
27% வரி: அமெரிக்க பொருட்களுக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விதிக்கப்படும் வரியில் பாதி அளவு வரி விதிப்பை அமல்படுத்துவதாக புதன்கிழமை அறிவித்தார். அந்த வகையில், இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு குறைந்தபட்ச அளவாக 10 சதவீத பரஸ்பர வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
மருந்து பொருட்களுக்கு விலக்கு: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி, மருந்து, செமிகண்டெக்டர், எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், ஐடி சேவை உள்ளிட்டவற்றுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ அமெரிக்காவை விட பிற நாடுகள்தான் எங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரிகளை விதிக்கின்றன. இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு, இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. இதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விதிக்கும் வரியை விட அமெரிக்காவில் அவர்களின் பொருட்களுக்கு பாதி அளவு வரி விதிப்பதன் மூலம் அவர்களிடம் கருணை காட்டியுள்ளேன். அவர்களுக்கு சிறப்பு சலுகை அடிப்படையில் பரஸ்பர வரி விதிக்கப்படுகிறது” என்றார்.
உலக தலைவர்கள் எதிர்ப்பு: ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனட பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், இத்தாலி பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வர்த்தக போரை உருவாக்கும் இந்த விவகாரத்தை எதிர்த்து போராட தயாராகி விட்டதாகவும், வரி விதிப்பு தொடர்பாக ட்ரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும்: ராகுல் கருத்து
இந்தியாவின் எல்லைப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது இந்திய பொருளாதாரத்தை முற்றிலுமாக பேரழிவுக்கு கொண்டு செல்லும். இந்த விவகாரங்களில் தெளிவான பதிலை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கவனமாக ஆராயப்படும்: வர்த்தக அமைச்சகம் தகவல்
இந்தியா பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி மற்றும் அதன் தாக்கம் குறித்து வர்த்தக அமைச்சகம் மிகவும் கவனமாக ஆராயும். இதுதொடர்பாக, உள்நாட்டு தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களிடமும் கருத்துகள் கேட்டகப்படும் என்று வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.