கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அமலாக்கத்துறையும் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்தது.
மைசூரு லோக் ஆயுக்தா கடந்த பிப்ரவரியில் இவ்வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ‘‘நில முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கபெறவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ” லோக் ஆயுக்தா விசாரணையில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கூறப்பட்டிருக்கிறது. அந்த முடிவுக்கு வருவதற்கு முன்பே, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே அமலாக்கத்துறை இவ்வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது’’ என்றார்.
லோக் ஆயுக்தா விசாரணையில் இருந்து தப்பித்த சித்தராமையாவுக்கு, தற்போது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.