தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு குலசேகர பாண்டியனால் திருப்பணிகள் முடித்து வைக்கப்பட்டது.
இந்த கோயில் ராஜகோபுரம் 175 அடி உயரமும் ஒன்பது நிலைகளை உடையதுமாக அமைக்கப்பட்டுள்ளது. மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகிய நாள்கள் இத்திருத்தலத்தின் சிறப்பு விழா நாள்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2024-ல் சட்டசபை கூட்டத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கூடுதலாக ரூ.1.60 கோடி செலவில் ராஜகோபுர பணியும் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று அறிவித்தார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதை பக்தர்கள், பொதுமக்கள் வரவேற்றனர்.
இந்தநிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வருகிற ஏப்ரல் 7-ந்தேதி நடப்பதாக தேதி குறிக்கப்பட்டது. தொடர்ந்து, கும்பாபிஷேக பணிகளுக்காக கோவில் கலசங்கள் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மீது தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கொடிமரம் புதுப்பிப்பு, சுற்று மண்டபம், பிரசாத ஸ்டால்கள், பூச்சு பணிகள், கலச புதுப்பிப்பு, பெயிண்டிங் பணிகள் என ஒவ்வொன்றிலும் கோவில் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைய துறைக்கு புகார்கள் பறந்தன.

இதன் எதிரொலியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நிர்வாக செயல் அலுவலர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கோப்புகள், ஆவணங்கள், மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான வரவு செலவுகள் உள்ளிட்டவை தணிக்கை செய்யப்பட்டது.
இதில் கோவில் பணத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய செயல் அலுவலர் முருகன், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் தென்காசி கோயிலில் திடீர் ஆய்வு நடத்திய புதிய தமிழகம் கட்சித்தவைவர் கிருஷ்ணசாமி, தென்காசி கோயில் கும்பாபிஷேகத்தை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கவேண்டும், கோவில் திருப்பணிகள் ஒவ்வொன்றிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது. ஆகவே தீர விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக பணிகள் தென்காசி கோயிலில் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவந்தனர்.
தொடர்ச்சியாக, காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏப்ரல் 7-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார்.
கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், கோயில் பணம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவும், கும்பாபிஷேக பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கவும் வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கக்கோரி, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.