இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி | Automobile Tamilan

மாருதி சுசூகி நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நடுத்தர சந்தைக்கான சியாஸ் செடான் காரின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சரிந்த விற்பனைக்கு ஏற்ப தொடர்ந்து சியாஸ் மாடலை மாருதி மேம்படுத்தாமல் தவிர்த்து வந்த நிலையில் இறுதியாக நீக்கியுள்ளது.

இந்த செடானுக்க போட்டியாக ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்கள் சந்தையில் கிடைத்து வருகின்ற நிலையில், இந்த மாடல்கள் நவீன தலைமுறைக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.


சியாஸின் நிலை குறித்து இந்தியா டுடே இதழ் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாருதியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்கான மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி, ” ​​சந்தையின் தேவைக்கேற்ப  மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு இலாகாவை நாங்கள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து வருகிறோம்” என்று கூறினார்.

“சியாஸைப் பொறுத்தவரை, உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம், பின்னர் சந்தையில் அடிப்படையில் மீண்டும் முடிவெடுப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், இந்திய சந்தையில் செடான் வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துவிட்ட நிலையில், பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் தேர்வு எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ஸ்டைல் வாகனங்களை நோக்கி நகருவதனால், ஒட்டுமொத்த செடான் சந்தை 10 % ஆக உள்ள நிலையில், எஸ்யூவி சந்தை 55% ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.