கொழும்பு,
பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் மூத்த மந்திரிகள் அடங்கிய குழு ஒன்று பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது.அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதில் முக்கியமாக, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுடன் இன்று (சனிக்கிழமை) விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கைெயழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையுடனான ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதைத்தவிர எரிசக்தி, இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பிரதமர் மோடியின் பயணம் உதவும் என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். மேலும் இந்தியா உதவியுடன் இலங்கையில் நடந்துள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் இணைந்து தொடங்க வைக்கிறார்கள். மேலும் சோலார் திட்டம் ஒன்றுக்கும் இருவரும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர்.