மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிசிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சமுத்திரக்கனி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
மேடையில் பேசிய அவர், ”கல்லூரி முடித்துச் சென்னை வந்தபோது நிறைய கம்யூனிஸ்ட் தோழர்களைச் சந்தித்தேன். எங்கள் இயக்குநர் வெற்றி மாறன் சாரைப் பார்க்கும்போது ஒரு சிவப்பு சிந்தனை வரும்.

‘தறியுடன்’ என்ற ஒரு நாவல். அதனை சாரின் உதவி இயக்குநர் ‘சங்கத்தலைவன்’ என்ற தலைப்பில் படமாக இயக்கினார். அதனை வெற்றி மாறன் சார் தயாரித்தார்.
தறித்தொழிலாளர்களின் பிரச்னையை அந்தப் படம் எடுத்துரைத்தது. ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற படங்கள் மூலம் என்னை ஒரு தளத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றார்.
ஒரு நாள் ‘காவல் கோட்டம்’ நாவலைப் படித்து வியந்துபோனேன். அந்த எழுத்தாளரைச் சந்தித்துப் பேசினேன். அதன் மூலம் சில விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.
இப்படி என்னைச் சுற்றி இருக்கும் நிறையப் பேர் என் கைகளைப் பிடித்து இந்த சிந்தனையுடன் நகர்த்திக்கொண்டு செல்கிறார்கள்.
எங்கள் துறையில் சிவப்பு சிந்தனையுடன் இருக்கும் இயக்குநர்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்.
வர்க்கத்தை ஒழிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமம் ஆக்குவதும்தான் ஒரு கம்யூனிச தத்துவம். கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடமைவாதி. ‘எல்லார்க்கும் எல்லாமும்’ கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட்.
உலகத்தில் எங்கு யார் சிவப்பு சட்டை அணிந்து வந்தாலும் ஒரு எளிய மனிதர் வருகிறார், அவரிடம் நாம் பேசலாம் என நினைக்கும் அளவிற்கு நம்பிக்கை பிறக்கும், சிறிய வயதில் இருந்து சிவப்பு என்றால் ஆசை.

அப்படி என்றால் கடவுளே கம்யூனிஸ்ட்தான். எந்த ஏற்றத் தாழ்வுகளையும், அவர் பார்ப்பதில்லை. சிவப்பு கலரைப் பார்த்தாலே ஒரு பீதி இருக்கும். ஒரு இடத்தில் ஓங்கிப் பேச வேண்டும் என்றால் எனக்குச் சிவப்பு சட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும்.
வலது, இடது என்பதில் எனக்கு நம்பிக்கைக் கிடையாது. தீயில் நல்ல தீ, கெட்ட தீ என்ற ஒன்று கிடையாது. தீ என்றால் அது தீ தான். ஒன்று சேர்வோம், நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என்று சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…