தேசிய குதிரையேற்ற போட்டியில் வென்றவர்களுக்கு காவல் ஆணையர் அருண் பரிசு வழங்கி கவுரவிப்பு

சென்னை: அகில இந்திய அளவில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் வெற்றி பெற்ற போலீஸாருக்கு பரிசு வழங்கி, பாராட்டிய காவல் ஆணையர் அருண், சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

43-வது அகில இந்திய போலீஸ் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை போலீஸாருக்கான போட்டிகள் கடந்த மாதம் 10 முதல் 25-ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இதில், தமிழக காவல் துறையின் குதிரைப்படை அணியும் பங்கேற்றது.

இப்போட்டியில் குதிரை சவாரி செய்யும் திறன் பிரிவில் தமிழக காவல் துறை அணியின் உதவி எஸ்.பி. ஷூபம் நாகர்கோஜ் வெள்ளிப் பதக்கமும், உதவி ஆணையர் அஜய் தங்கம் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

‘டிரஸ்சேஜ்’ எனப்படும் குதிரை பயிற்சி ஒருங்கிணைப்பு பிரிவில் பெண் காவலர் சுகன்யா தங்கம் மற்றும் சவாரி திறன் பிரிவில் வெள்ளி என 2 பதக்கங்களை வென்றார். குதிரை பராமரிப்பாளர் தேர்வில் குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். குதிரையுடன் அதிக தூரம் தாண்டும் பிரிவில் காவலர் மணிகண்டன் 4-வது இடம் பிடித்தார்.

அகில இந்திய அளவிலான இந்த போட்டியில் பதக்கங்களை வென்று தமிழக காவல் துறைக்கும், சென்னை காவல் துறைக்கும் பெருமை சேர்த்த குதிரைப் படைக்கும் சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பதக்கங்களை வென்ற குதிரைப்படை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் காவல் ஆணையர் அருண் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

வெற்றி பெற்ற போலீஸாருக்கு காவல் ஆணையர் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும், போட்டியில் வெற்றி பெற உதவிய குதிரைகளுக்கு காவல் ஆணையர் அருண், கேரட் ஊட்டிவிட்டு தடவிக் கொடுத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் கபில்குமார் சி.சரத்கர், கண்ணன், சுதாகர், ராதிகா, இணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் பேசிய இணை ஆணையர் விஜயகுமார், “வருங்காலங்களில் குதிரைகளுக்கு இன்னும் சிறப்புப் பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள், மேலாளர்களை ஏற்பாடு செய்வதற்கு காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமல்லாது, தமிழக அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் குதிரைகளுக்கு ஏ.சி. வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

விழாவின் முடிவில், காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மேலும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாடும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.