மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் அணியுடன் இணைவார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக காயத்தில் இருந்து வந்த பும்ரா தற்போது பிசிசிஐயின் மருத்துவ குழுவிடமிருந்து விளையாட அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மறுவாழ்வு பெற்று வந்த பும்ரா முழுவதும் குணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அந்த தொடரில் அவர் 32 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
விரைவில் ஐபிஎல்லில் பும்ரா
இன்னும் ஒரு சில நாட்களில் பும்ரா மும்பை அணியில் இணைவார் என்றும், ஆனால் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெற மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏழாம் தேதி மும்பை வான்டே மைதானத்தில் நடைபெற உள்ளது.
பும்ரா ஐபிஎல்லில் இதுவரை நான்கு போட்டிகளை மிஸ் செய்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முதலில் இடம்பெற்ற அவர் காயம் முழுவதும் குணமடையவில்லை என்பதனால் நீக்கப்பட்டார், அவருக்கு பதில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். இன்னும் ஒரு சில நாட்களில் மும்பை அணியில் இணைந்தாலும் அடுத்த இரண்டு மூன்று போட்டிகளுக்கு பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என்றும் அதன் பிறகு மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார்கள் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பும்ரா மும்பை அணிக்காக வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட அதிகபட்ச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி பும்ரா இல்லாமல், இந்த ஆண்டு விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக விளையாடிய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்களை எடுத்து இருந்தாலும் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் பும்ராவின் வருகைக்காக காத்துக்கொண்டுள்ளனர்.