புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் தன்கனல் மாவட்டம் மன்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரசாத் நாயக். இவர் தனது நண்பர்களான பாபுலா நயல் உள்பட 4 பேருடன் நேற்று இரவு 11 மணியளவில் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டிற்குள் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். கள்ளத்துப்பாக்கியுடன் நண்பர்கள் அனைவரும் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் அனைவரும் ஒவ்வொரு புறமும் முயலை தேடி அழைந்துள்ளனர். இரவு என்பதால் போதிய வெளிச்சமின்மை நிலவியுள்ளது.
அப்போது, புதர் படந்த இடத்தின் அருகே பாபுலா நயல் முயலை தேடியுள்ளார். அப்போது, புதரில் சிறு சத்தம், அசைவு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் முயல் இருக்கலாம் என்று எண்ணிய பிரசாத் முயல் என நினைத்து தவறுதலாக தனது நண்பர் பாபுலா நயலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நயல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எஞ்சிய 4 பேரும் சேர்ந்து நயலின் உடலை முந்திரி காட்டிற்குள்ளேயே மறைத்துவைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
முயல் வேட்டைக்கு சென்ற கணவர் வெகுநேரமாகியும் வீடி திரும்பாதது குறித்து நயலின் மனைவி பிரசாத் இடம் கேட்டுள்ளார். அப்போது, முயல் வேட்டையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து நயல் உயிரிழந்துவிட்டதாக பிரசாத் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் முந்திரி காட்டிற்குள் சடலமாக கிடந்த நயலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரசாத் மற்றும் அவரது 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.