லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் திலக் வர்மா ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.
இதன் காரணமாக அவர் 23 பந்தில் 25 ரன் எடுத்திருந்த போது ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகி வெளியேறினார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி ‘ரிட்டயர்டு அவுட்’ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மிட்செல் சான்ட்னெருக்காக திலக் வர்மாவை ‘ரிட்டயர்டு அவுட்’ ஆக்குகிறீர்களா?. இதை எனக்கு புரிய வையுங்கள்.
ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ரன் குவிக்க முடியாமல் திணறினார். ஆனால், ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகவில்லை. அப்படி என்றால் திலக் வர்மாவை மட்டும் ஏன் ‘ரிட்டயர்டு அவுட்’ ஆக்க வேண்டும்?”. என கேள்வி எழுப்பி உள்ளார்.