வக்பு சட்ட திருத்த மசோதா குறித்த சோனியா காந்தியின் கருத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் பேசும்போது, “வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் ஆகும். நாட்டின் பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. அதன் ஒரு பகுதியாகவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
சோனியா காந்தியின் கருத்து தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பிரச்சினை எழுப்பினார். அப்போது சோனியா காந்தியின் கருத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் கண்டனம் தெரிவித்தார். சோனியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஓம் பிர்லா அவையில் கூறியதாவது:
மக்களவையின் முன்னாள் உறுப்பினரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வரும் மூத்த காங்கிரஸ் தலைவரின் கருத்து துரதிஷ்டவசமானது. மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று அவர் கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களவையில் 13 மணி நேரம் 53 நிமிடங்கள் விவாதம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த 61 எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். அவை விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர், அவையின் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது வருந்தத்தக்கது. அவரின் கருத்து நாடாளுமன்ற ஜனநாயகம், மாண்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.