வக்பு சட்ட திருத்த மசோதா அவசியம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் – நடிகர் சரத்குமார்

சென்னை: வக்பு சட்ட திருத்த மசோதா அவசியமானது, புதிதாக கட்சி தொடங்கியவர்கள் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்பு சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவருவதும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் காலத்தின் கட்டாயமாகும்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், நாட்டில் உள்ள பல மதவழிபாட்டு தலங்கள், அரசு கட்டிடம் உட்பட பலருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக உரிமை கோரப்படுவதால், சொத்து பிரச்சினைகளை களைந்து, தீர்வு காணுவதற்கு இந்த சட்ட திருத்தம் அத்தியாவசியமானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வக்பு வாரிய சொத்துகளின் தரவுகள், பதிவுகள், தணிக்கை விபரங்கள், புகார்கள், வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை வெளியிட டிஜிட்டல் இணையதளம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல திருத்தங்கள் செய்து வெளிப்படையான அரசு நிர்வாகம் மேற்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பாதிப்பு?

ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து என பல சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, சிறுபான்மையினருக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. இதுகுறித்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள் புரிதல் இல்லாமல் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

எனவே, வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து தவறான கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் நலனுக்காக கொண்டு வரப்படும் இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கும் கட்சிகள் ஏகமனதாக வரவேற்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.