புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்பார்த்ததை விட மத்திய அரசுக்கு ஆதரவு வாக்குகள் அதிகமாகின. இதன் பின்னணியில் எதிர்க்கட்சி எம்.பி.க்களில் இரு வேறு நிலைப்பாடு இருந்தது தெரிய வருகிறது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வக்பு மசோதா 288 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது. இதன் மறுநாளான நேற்று இந்த மசோதா மாநிலங்களவையிலும் பிரச்சினையின்றி நிறைவேற்றப்பட்டது. நள்ளிரவு வரை நீண்ட விவாதத்திற்கு பின் எம்பிக்களுக்கான வாக்கெடுப்பு 2.30 மணிக்கு துவங்கியது. இதன் முடிவில் மொத்தம் 128 எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த எண்ணிக்கையை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்கும் பாஜகவுக்கும் வியப்பை அளித்துள்ளது. இதற்கு வாக்குப் பதிவு இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிசயமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. வக்பு திருத்த மசோதாவின் மீது இரு தரப்பு கட்சிகளும் மிகவும் விழிப்புடன் இருந்தனர். காங்கிரஸின் முக்கியத் தலைவரான சோனியா காந்தியே முழு விவாதங்களையும் கேட்டபடி அவையில் இறுதிவரை இருந்துள்ளார்.
இவரைப் போல் இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் வாக்கெடுப்பிற்காக கவனத்துடன் இருந்தனர். என்றாவது ஒரு நாளுக்காக வரும் நியமன உறுப்பினர்களும் நேற்று தவறாமல் வந்திருந்தனர். இந்நிலையில், நடைபெற்ற வாக்கெடுப்பின் முடிவில் ஆதரவாக 128, எதிர்ப்பாக வெறும் 95 வாக்குகளும் விழுந்தன.
நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களில் அவசியமானக் குறைந்தபட்ச வாக்குகள் அவையின் பாதிக்கும் அதிகமாக என 115 இருக்க வேண்டும். ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் வக்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகள் பெறப்பட்டன. இதில் கூடுதல் வாக்குகள் 13 ஆகும்.
மத்திய அரசை பொறுத்தவரை மாநிலங்களவையில் ஆதரவு எம்பிக்கள் 117. இவர்களுடன் தற்போதுள்ள நியமன எம்பிக்கள் எண்ணிக்கை 2. இதில் கூடுதலாக மத்திய அரசுக்கு எம்பிக்களின் வாக்குகள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து கிடைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது மசோதாவுக்கு எதிராக 95 வாக்குகள் பதிவாகின.
மாநிலங்களவையின் விவாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து பேசினாலும், அவர்களில் சில கட்சிகளின் எம்பிக்கள் இரு வேறு நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். இதற்கு அவர்களது கட்சியின் கொறடாவும் எந்த உத்தரவும் இடாமல் மவுனம் காத்தது சாதகமானது.
இந்த வரிசையில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை தங்கள் எம்பிக்களிடம் தம் மனசாட்சிக்கு சரியாகப்படும்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அவையிலிருந்த ஒடிசாவின் பிஜேடியின் 3 எம்பிக்களில் ஒருவர் மட்டுமே எதிராக வாக்களித்தார். இதர இரண்டு எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவளித்து வாக்களித்துள்ளனர். இத்தனைக்கும், தொடர்ந்து நான்கு முறை ஒடிசா ஆட்சியிலிருந்த பிஜேடியை தோல்வியுறச் செய்தது பாஜக.
இதேபோல், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எட்டு எம்பிக்களில் ஏழு பேர் ஆதரவளித்தனர். அதேசமயம், அக்கட்சியின் ஒரு எம்பி மட்டும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.
தேசிய அளவிலான முக்கிய எதிர்க்கட்சி கூட்டணியான இண்டியாவில் அதிமுக இடம்பெறவில்லை. என்றாலும் அக்கட்சியின் சார்பில் நான்கு எம்பிக்களுமே மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
எதிர்க்கட்சிகளில் நான்கு எம்பிக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதில் இண்டியா கூட்டணியின் நான்கு எம்பிக்களும் அடங்குவர்.
உடல்நலம் காரணமாக தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஷிபு சோரன் மற்றும் மஹுவா மான்ஜி கலந்துகொள்ளவில்லை. மாநிலங்களவை வாக்கெடுப்பில் மேலும் சில சந்தேகங்கள் இன்னும் தெளிவாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.