வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக கேரளாவின் முனம்பம் கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், பள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள கடற்கரை கிராமம் முனம்பம். பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், இந்துக்கள் வாழும் இந்த கிராமத்தில் மீன்பிடித் தொழில் மற்றும் இறால் வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் பள்ளிபுரம் ஊராட்சிக்குட்பட்ட முனம்பம், சேரை கிராமங்களில் 404 ஏக்கர் நிலத்துக்கு கேரள மாநில வக்பு வாரியம் உரிமை கோரியது. இதையடுத்து இந்த கிராம மக்களின் நில உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இப்போராட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து முனம்பம் கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர். பாஜகவின் புதிய மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “கேரள அரசியலில் இது பெரிய தருணம் ஆகும். தங்களை புறக்கணித்து வந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு முனம்பம் கிராம மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இவர்கள் நில உரிமைகள் பெறுவதை பாஜக உறுதி செய்யும். வரும் நாட்களில் மேலும் பலர் பாஜகவில் இணைவார்கள்” என்றார்.