வக்பு மசோதா மீதான விவாதத்தில் வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி பங்கேற்காதது குறித்து கேரள முஸ்லிம் பத்திரிகையின் தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் அண்மையில் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் நடைபெற்ற இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் வயநாடு தொகுதியான பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்பான சமஸ்தா கேரளா ஜெம்-இய்யாத்துல் உலமா நடத்தி வரும் மலையாளப் பத்திரிகையான சுப்ரபாதத்தின் தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அந்த தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:
முஸ்லிம்கள் மீதும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மை மீது பாஜகவினர் நடத்தும் மிகப்பெரிய தாக்குதலாக வக்பு மசோதா பார்கக்ப்படுகிறது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவை, மாநிலங்களவையில் நடைபெற்றபோது கட்சி பேதம் இல்லாமல் பல்வேறு கட்சித் தலைவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்த்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் இதை பலமாக எதிர்த்தனர்.
ஆனால், இந்த விவாதத்தில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கும் மக்களவை எம்.பி.யான பிரியங்கா பங்கேற்கவில்லை. வயநாடு தொகுதியிலிருந்து அண்மையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்தி பங்கேற்காததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சிக் கொறடா உத்தரவிட்டிருந்தபோதும் அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இது ஒரு அழியாத கறையாகவே பல ஆண்டுகளுக்கு இருக்கும்.
அதேபோல் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பேசாததும் சரியல்ல. நாட்டின் ஒற்றுமையைக் குலைப்பது போல் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.