‘லக்னோ வெற்றி!’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடேயேயான ஐ.பி.எல் போட்டி லக்னோ மைதானத்தில் நடந்திருந்தது.
இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களுடைய சொந்த மைதானத்தில் லக்னோ அணி, மும்பை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணி கடைசி ஓவர் வரை வெற்றி பெற முயற்சி செய்தும், அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.

‘லக்னோ பேட்டிங்’
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் 11-ல் ரோகித் ஷர்மா விளையாடவில்லை.
பயிற்சியின்போது அவருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டதாக ஹர்திக் கூறினார். லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக, மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கி இருந்தனர்.
முதல் ஓவரில் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை பவுண்டரி அடித்து தனது ஆட்டத்தைத் தொடங்கினார் மிட்செல் மார்ஷ்.
‘மார்ஷ் அதிரடி’
இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரி, மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி எனத் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடத் தொடங்கினார் மிட்செல் மார்ஷ். அவர் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.
பவர் பிளே முடிவில் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கம் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 69 ரன்கள் எடுத்திருந்தனர். பவர் பிளேவிற்கு பிறகு மும்பையின் பந்து வீச்சாளர்கள் லக்னோ அணியின் ரன் குவிப்பை மெதுவாகக் குறைக்கத் தொடங்கினார்கள்.
மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து 7 வது ஓவரில் விக்னேஷ் புத்தூர் பந்தில் கேட்ச் ஆனார்.

இதுவரை நடந்த போட்டிகளில் பந்து வீச்சாளர்களை அதிரவிட்ட நிகோலஸ் பூரன் 9வது ஓவரில் ஹர்டிக் பாண்டியா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அவர் 6 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
10 ஓவர் முடிவில் லக்னோ அணி 100 ரன்கள் எடுத்திருந்தது. இந்த போட்டியில் ரிஷப் ஃபண்ட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவர் 11வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அவர் 6 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 146 ரன்கள் எடுத்திருந்த்து. 16வது ஓவரில் அஸ்வனி குமார் வீசிய பந்தில் கேட்ச் ஆனார் பதோனி.
தொடக்கத்தில் இருந்து ஆட்டம் இழக்காமல் ஆடிவந்த மார்க்ரம் 18 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அவர் நான்கு சிக்சர்கள், 2 பவுண்டரி என 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

19வது ஓவரில் போல்ட் வீசிய பந்தில் சமத் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசினார். கடைசி ஓவரில் மில்லர் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆகாஷ் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். முதல் இன்னிங்சில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்திருந்தனர்.
தனது அதிரடியான பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட் எடுத்து லக்னோ அணியின் பேட்டர்களை பதற்றம் அடையச் செய்திருந்தார்.
‘மும்பை சேஸிங்’
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கியது மும்பை அணி. அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக வில் ஜேக்ஸ் மற்றும் ரயன் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினர்.
இரண்டாவது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தை புல் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆனார் வில் ஜேக்ஸ். அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த நமன் திர், நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் என அடுத்தடுத்து விளாசினார்.
தாகூர் வீசிய பந்தில் ரிக்கல்டன் கேட்ச் ஆனார். வில் ஜேக்ஸ் அடித்த பந்தைப் பிடித்த ரவி பிஷ்னோய் அதே இடத்தில் நின்று ரிக்கல்டன் அடித்த பந்தினையும் பிடித்து அவுட் ஆக்கினார்.
அவர் வேறு இடத்திற்கு மாறாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் நின்று கேட்ச் பிடித்து மும்பை அணியின் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

நமன் திர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தொடக்கத்திலிருந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். பவர் பிளேவின் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து இருந்தது.
9வது ஓவரில் திக்வேஷ் ரதி, நமன் திர்ரை போல்ட் ஆக்கினார். அவர் மூன்று சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகள் என 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் செய்ய வந்த திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சற்று நிதானமாக விளையாடத் தொடங்கினார்.
‘டெத் ஓவர்’
சூரியகுமார் பத்தாவது ஓவரில் ஒரு பவுண்டரி, பதினோராவது ஓவரில் இரண்டு பவுண்டரி என மும்பை அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார்.
15 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து இருந்தது மும்பை அணி. 16வது ஓவரில் திலக் வர்மா அடித்த பந்தை ஆகாஷ் தீப் சற்று தாவிப் பிடிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அந்த பந்து கையில் சிக்கவில்லை. 17வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தைச் சற்று சாய்ந்து அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆனார் சூரியகுமார். அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

19வது ஓவரில் திலக் வர்மா ரிட்டைய்டு அவுட்டில் வெளியே செல்ல, மிட்செல் சான்ட்னர் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ் விளாசினார்,
அதன் பிறகு அவர் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களுடைய சொந்த மைதானத்தில் லக்னோ அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…