நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. 4 போட்டிகள் விளையாடிய நிலையில், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. மற்ற 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த மோசமான தோல்விகளுக்கு ரசிகர்கள் பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்.
குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் சென்னை படுதோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு பல காரணங்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக தோனி 9வது இடத்தில் களம் இறங்கியதை கடுமையாக சாடினர்.
இதற்கிடையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், தோனி முன்பு போல் இல்லை. அவருக்கு முழங்கால் பிரச்சனை உள்ளது. எனவே அவரால் 9, 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது என தெரிவித்திருந்தார். இது மேற்கொண்டு ரசிகர்களை கோபமடைய செய்தது. முழு உடற்தகுதி இல்லை என்றால் அவர் ஓய்வு பெறலாம் என்றும் அப்படி ஓய்வு பெற்றால், வெறு ஒருவருக்காவது இடம் கிடைக்கும் என்றும் கடுமையாக ரசிகர்கள் சாடினர். இச்சுழலில் அவர் இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில், ஓய்வு குறித்து பேசி உள்ளார் மகேந்திர சிங் தோனி. ராஜ் ஷமானியுடனான பாட்காஸ்டில் இது குறித்து பேசிய அவர், இல்லை, இப்போதைக்கு இல்லை (ஓய்வு குறித்து). நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை இன்னும் எளிமையாக வைத்திருக்கிறேன். எனக்கு தற்போது 43 வயது. இந்த ஐபிஎல் முடிவதற்குள் 44 வயதை எட்டிவிடுவேன். எனவே அதன் பிறகு விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல. என் உடல்தான் முடிவு செய்கிறது. எனவே ஒரு வருடத்திற்கு ஒரு முறை. அதனை பிறகு பார்ப்போம் என கூறினார்.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக, ஓய்வு குறித்து பேசிய தோனி, நான் 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனவே இன்னும் சிறிது காலம் ஆகும். இதற்கிடையில் நான் கிரிக்கெட்டை ரசித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் என்னால் விளையாட முடியும். நான் சிறு வயதில் அனுபவித்ததை போல அனுபவிக்க விரும்புகிறேன். சிறுவயதாக இருக்கும் போது, மாலை 4 மணி ஆகிவிட்டால் விளையாட சென்றுவிடுவேன். ஒருவேளை மழை பெய்வது போல் இருந்தால், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். அதே வகையான அப்பாவித்தனத்துடன் விளையாட விரும்புகிறேன் எனக் கூறி இருந்தார்.
மேலும் படிங்க: Exclusive: சிஎஸ்கே தோல்விக்கு பிசிசிஐ போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்!
மேலும் படிங்க: மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. என்ட்ரி கொடுக்கும் பும்ரா.. எந்த போட்டியில் தெரியுமா?