முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் 180 – 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கிதான் விளையாட வேண்டி வரும் என்று நினைத்தேன். இங்கு சேஸ் செய்வது நல்லது என்றாலும் எங்களால் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. தொடரின் ஆரம்பத்திலேயே எங்களுக்கு ஒரு தோல்வி வந்தது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.
இது ஒரு நல்ல ஆடுகளம், பந்து மெதுவாக நின்று வந்தது. எனவே நாங்கள் மெதுவாக பார்ட்னர்ஷிப்ளை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இந்த ஆட்டத்திலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று பனியின் தாக்கம் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் செயல்பட்ட விதம் குறித்து வீடியோக்களை பார்க்க வேண்டும்.
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். புதிய பேட்ஸ்மேன்களுக்கு உடனே செட் ஆவது என்பது எளிதான காரியம் அல்ல. நேஹல் வதேரா இந்த போட்டியில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அற்புதமாக விளையாடினார். இந்த தோல்வி முக்கியமானது என்று நினைக்கிறேன். இதிலிருந்து தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டிகளில் முன்னேறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.