ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 08) தொடரின் 22வது லீக் ஆட்டம் முல்லன்பூரின் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ப்ஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கம் முதலே விக்கெட்கள் சரிய தொடங்கின. பிரப்சிம்ரன் சிங் டக் அவுட் ஆக, அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோனிஸ் 4, நேகல் வதேரா 9, மேக்ஸ்வெல் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் மறுபக்கம் தொடக்க முதலே இருந்த ப்ரியான்ஸ் அர்யா அதிரடியாக ஆடி ஒற்றை ஆளாக பஞ்சாப் அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 39 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், 103 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து இறுதி கட்டத்தில் மார்கோ யான்சன் மற்றும் ஷஷாங்க் சிங் சிறப்பாக விளையாடி அணியை 200 ரன்களை கடக்கச் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் சேர்த்தது. மார்கோ யான்சன் 34 ரன்களும் ஷஷாங்க் சிங் 52 ரன்களும் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே களத்தில் நிலைத்து இருந்தனர். அவர்கள் 61 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ருதுராஜ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சிவம் துபே, கான்வே உடன் கைக்கோர்த்தார். இந்த கூட்டணி அணிக்கு ரன்களை சேர்த்தது. ஆனால் வெற்றியின் பக்கம் அணியை இழுத்துச்செல்ல முடியவில்லை.
ஒருகட்டத்தில் துபே 42 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 201 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி சார்பாக லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிங்க: பயம்காட்டிய கொல்கத்தா அணி.. கடைசி நேரத்தில் லக்னோ த்ரில் வெற்றி!
மேலும் படிங்க: பிளமிங்கால் ஒன்றும் csk கோப்பைகளை வெல்லவில்லை.. தோனிதான் காரணம் – ஹேமாங் பாதானி!